Thalapathy Vijay Corona Donation; விஜய்யைப் போன்று அனைத்து நடிகர்களும் உதவ வேண்டும்: முதல்வர் கோரிக்கை! கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.
தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,
தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,
கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),
பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்துள்ள விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், புதுச்சேரியில் இருக்கும் அழகான இடங்களில் நடிகர்கள் தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்துகின்றனர். புதுச்சேரி அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
இதனை மறக்காத வகையில், நடிகர் விஜய் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி.
அவர் அளித்துள்ள நிதியுதவியை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
மற்ற நடிகர்களும் விஜய்யைப் போன்று புதுச்சேரி அரசுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.