Raghava Lawrence; சார் நீங்க மொத்தமா ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ கொடுத்துருங்க! நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக இலவசமாக உணவு வழங்குவதற்காக அம்மா உணவகங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இலவச உணவு வழங்குவதற்காக ராகவா லாரன்ஸ் அம்மா உணவகங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டிவி சேனல்கள் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது அரிசி மூட்டைகள் வழங்குதல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஜெயம் ரவி, சூர்யா குடும்பத்தினர், அஜித், விஜய் சேதுபதி, விஜய் மக்கள் இயக்கம், விஷால், சூரி, யோகி பாபு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஹரிஷ் கல்யாண் என்று பலரும் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கியுள்ளனர்.
அந்த வகையில், ராகவா லாரன்ஸ் ரூ.3.65 கோடி வரையில் நிதியுதவி அளித்திருந்தார்.
ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
மேலும், நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என்று முதலில் ரூ.3 கோடி வழங்கினார்.
இதையடுத்து துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
தொடர்ந்து, விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்தார்.
இந்த நிலையில், தற்போது கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா ஹோட்டல்களில் இலவச உணவு வழங்கும் வகையில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக ரூ.4.15 கோடி வரையில் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதற்குப் பதிலாக ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ மொத்தமாக கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துவிடலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.