Rajinikanth; வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்த ரஜினிகாந்த்! கொரோனா என்ற இருள் அகல நாடு முழுவதும் மக்கள் ஒளியேற்றியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏத்தியபடி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது வீட்டு வாசலில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏந்தி ஒளியேற்றி கொரோனாவுக்கு எதிராக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என்று நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டு மெழுகுவர்த்தி என்னும் நம்பிக்கையை ஒளியை ஏந்திப் பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது #LightsOfHope, #9MinutesForIndia ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.


