Rajinikanth Political Entry; ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் (Rajinikanth) தனது ஆன்மீக அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அதோடு சரி, அதன் பிறகு இதோ வருகிறார்? அதோ வருகிறார் என்று தான் பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் அரசியல் பற்றி அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை.
இந்த நிலையில், கடந்த சில திங்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற (Rajini Makkal Mandram) மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதாகவும், அதற்கு மாவட்ட செயலாளர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வந்தது.
அதோடு, ரஜினிகாந்தான் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்ததாகவும் தகவல் வந்தது.
இதையடுத்து, தற்போது மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசுகிறார். அதில், தான் முதல்வர் வேட்பாளராக வரப்போவதில்லை என்று அறிவிக்க இருப்பதாக தகவல் வருகிறது.
தொடர்ந்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்கயிருப்பது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் முக்கியகட்டமாக இன்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, 10.30 மணிக்கு லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.
இதன் காரணமாக, அங்கு ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் உருவம் கொண்ட கட்சி கொடியுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனினும், இன்றைய அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றம் குறித்த மாநாடு பற்றியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஜினியின் முடிவுக்காக தற்போது தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் (#RajiniMakkalMandram),
ரஜினிகாந்த அரசியல் வருகை (#Rajinikanthpoliticalentry), ரஜினியே எங்கள் முதல்வர் (#ரஜினியே_எங்கள்_முதல்வர்) ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.