Rajiinikanth; டாஸ்மாக் விவகாரம்: கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்: தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை! டாஸ்மாஸ் கடைகள் திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 6 ஆம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் எழுந்தது. மேலும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், ஆன்லைன் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த டுவீட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.