Sai Pallavi; மலர் டீச்சர் சாய் பல்லவி பர்த்டே டுடே! கோத்தகிரியில் பிறந்து வளர்ந்த நடிகை சாய் பல்லவி இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாள் இன்று.
கடந்த 1992 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தாமரை – ராதா. இவர்கள் படகாஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மேலும், படுகு மொழி பேசக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த சாய் பல்லவி அதன் பிறகு ஜார்ஜியாவில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட திபிசிலி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.
ஆனால், இந்தியாவில், அவர் டாக்டராக பணியாற்றியதில்லை. இருதய நோய் நிபுணராக இருப்பதே அவரது மிகப்பெரிய நோக்கம். மலையாளத்தில் வந்த கஸ்தூரிமான் என்ற படத்திலும், தாம் தூம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அதற்கு கொஞ்சம் தயங்கியவாறு ஒப்புக்கொண்டுள்ளார். காரணம் முகத்தில் இருந்த பரு. எப்படியோ நடித்து முடித்தார்.
படமும் ஹிட் கொடுக்கவே ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். பிரேமம் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
பிரேமம் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த தியா என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.
அதன் பிறகு தனுஷ் நடித்த மாரி 2 படம் சாய் பல்லவிக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. படத்தை விட ரௌடி பேபி பாடல் உலகம் முழுவதும் யூடியூப்பில் சாதனை படைத்தது.
சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்தார். ஆனால், படம் வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை.
எனினும், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதே போன்று தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தீ அல்டிமேட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஓணம் பண்டிகையால் ஈர்க்கப்பட்ட சாய் பல்லவி, பூக்களால் ரங்கோலி வரையவும் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாய் பல்லவி இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdaySaiPallavi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.