Simbu; கொரோனா பாதிக்கப்பட்ட ரசிகருக்கு தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு! கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த ரசிகருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு நலம் விசாரித்துள்ளார்.
தனது ரசிகருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த நடிகர் சிம்பு, அவரிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், மனோபாலா, பார்த்திபன், யோகி பாபு, சூரி, நயன்தாரா என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி மன்றத்தில் மாவட்ட தலைவர் சி என் சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக ஆனந்தன் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அறிந்த சிம்பு, நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது உடல் நலம், சிகிச்சை முறைகள் குறித்து நலம் விசாரித்துள்ளார். மேலும், மன தைரியத்தை கைவிட வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளார். அவர் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஹலோவில் சிம்பு ரசிகருக்கு கொரோனா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு டுவிட்டரில், #SilambarasanTR என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.