Sivakarthikeyan; தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்: சிவகார்த்திகேயன்! சாத்தான்குளம் சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கும் வகையில், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டப்படி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டினர்.
மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் சாத்தான்குளம் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சாத்தான்குளம் கொடூர சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குற்றத்தின் பின்னணியில் உள்ள மிருகத்தனமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்காத வகையில், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை இருக்க வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு கிடைக்கும் நீதி நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.