Thalapathy Vijay Birthday; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்! நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய், அறிவுறுத்தியதாக மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஜூன் 22 பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இது முற்றிலும் கல்லூரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். எப்படா தளபதி பிறந்தநாள் வரும், கொண்டாடலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
விஜய் பிறந்தநாளுக்கு அன்னதானம் செய்வது, கோயில்களில் பூஜை செய்வது, நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குவது, மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது என்று ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு.
ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுமா என்று கேள்வி இருந்தது.
இந்த நிலையில், விஜய் பிறந்தநாள் தொடர்பாக, தளபதி விஜய் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதன்படி, கொரோனா தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், பொதுமக்கள், ரசிகர்கள் நலன் கருதி ஜூன் 22 அண்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்த கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என்று எந்த செயல்களிலும் ஈடுபடாமல்,
பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படி மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் மூலமாக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அறிவுறுத்தியுள்ளார். தளபதி வழி செல்வோம்! பின்பற்றுவோம்!! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் பிறந்தநாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு இந்த அறிக்கை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது மற்றுமொரு ஏமாற்றமும் ரசிகர்களுக்கு கிடைத்தது. எனினும், மக்களின் நலன் கருதி ரசிகர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.