Varalaxmi Sarathkumar; கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண்கள் பலரும் கொடுமைகளை அனுபவித்து வருவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
பெண்கள் கொடுமைகளை சந்தித்து வருவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் காரணமாக சாதாரண ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பிரபலங்கள், சமையல் செய்வது, ஓவியம் வரைவது, வீட்டை சுத்தம் செய்வது, உடற்பயிற்சி, தோட்ட வேலை செய்வது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வீட்டில் இருக்கும் பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இது பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் குடும்ப கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உதவி எண் உள்ளது.
1800 102 7282 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த நம்பரை கொடுத்து உதவி செய்யுங்கள்.
இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர், படிக்காதவர் என்பது பார்த்து வரக் கூடிய விஷயமல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
எந்தப் பெண்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உடனடியாக இந்த எண்ணை அனைவருக்கும் பகிருங்கள் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
ஏற்கனவே பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.