Thalapathy Vijay; விஜய் நிதியுதவியாக கொடுத்த ரூ.5000 பணத்தை அவரது ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவியது தளபதி விஜய்க்கு பெருமை சேர்த்துள்ளது.
தல ரசிகருக்கு உதவிய விஜய் ரசிகர் தளபதிக்கு பெருமை சேர்த்துள்ளது.
விஜய்யும், அஜித்தும் காலங்காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களை எதிரிகளாக நினைத்தது இல்லை.
ஆனால், அவரது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்கின்றனர். அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.
உண்மையில், விஜய், அஜித் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அண்மையில், நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.
எப்போதும், இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி புகழ்ந்து கொண்டாலும், அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கலாய்ப்பதும், விஜய் பிறந்தநாளுக்கு மோசமான டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்குவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், உண்மையில், ஒரு அதிசயம் நடந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
அதோடு, கஷ்டப்படும் ரசிகர்களுக்கு தளபதி விஜய் ரூ.5 ஆயிரம் நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் போட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற விஜய் ரசிகருக்கும் அந்த நிதியுதவி கிடைத்துள்ளது.
ஆனால், அவர் அந்த ரூ.5 ஆயிரம் பணத்தை தனது நண்பரான அஜித் ரசிகர் மாற்றுத்திறனாளியான சசிகுமாருக்கு கொடுத்துள்ளார்.
நாகராஜ் மாற்றுத்திறனாளி சசிகுமாருக்கு உதவிய போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது விஜய் ரசிகருக்கு மட்டும் அல்ல, விஜய்க்கும் பெருமையைச் சேர்த்துள்ளது.
எப்போது அடித்துக் கொள்ளும் ரசிகர்களுக்கு மத்தியில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று பெருமையோடு மார்தட்டிக்கொள்ளும் நண்பர்களாக விஜய் – அஜித் ரசிகர்களான நாகராஜ் மற்றும் சசிகுமார் ஆகியோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.