Priyanka Chopra; எந்த ஒரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது: பிரியங்கா சோப்ரா! சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டரில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் கேள்விப்பட்ட விஷயம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திகிறது. என்ன குற்றம் செய்திருந்தாலும், எந்தவொரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது.
மேலும், இதன் பிறகு அவர்களது குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரன் ஷிகர் தவான் கூறுகையில், தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மீது மிருகத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி திகிலுறச் செய்தது.
அந்த குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்க நாம் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.