Nirbhaya; 7 நிமிஷத்துல சீரழித்தவர்களுக்கு 7 ஆண்டுக்குப் பிறகு தூக்கு: வரலட்சுமி சரத்குமார்! நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவி நிர்பயா (Nirbhaya) பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் (2012 Delhi Gang Rape), ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று 18 வயதுக்குட்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
முகேஷ் சிங் (32), வினய் சர்மா (26), அக்ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25) ஆகிய 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நிர்பயா வழக்கில் (Nirbhaya Case) குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு ஒரு போராளியாக உயிரிழந்தார். அவளுடைய வாழ்க்கையை சீரழிக்க 7 நிமிடத்திற்கும் குறைவான நேரம் எடுத்த போது, இந்த மிருகங்களை தூக்கிலிட 7 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
எப்போது இது போன்ற குற்றங்கள் நிகழ்கிறதோ அப்போதே அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.