Home சிறப்பு கட்டுரை English Calendar History | ஆங்கில நாட்காட்டி வரலாறு

English Calendar History | ஆங்கில நாட்காட்டி வரலாறு

வரலாறு முக்கியம் அமைச்சரே...

0
1562
ஆங்கில நாட்காட்டியின்

English Calendar History: ஆங்கில நாட்காட்டி (இங்கிலீஷ் காலண்டர்), ரோமானிய காலண்டர், ஜூலியன் காலண்டர், கிரகோரியன் காலண்டர் வரலாறு.

ஆங்கில நாட்காட்டி உருவான கதை   (English Calendar History)

உலகில் உள்ள நாட்காட்டிகள் அனைத்துமே சந்திரனையும், சூரியனையும் மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன.

சூரியனை, பூமி ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422 நாட்கள்) ஆகும். சந்திரன், பூமியைச் சுற்றிவர 29 நாட்கள், 12 மணி நேரம், 44 நிமிடங்கள் (29.53059 நாட்கள்) ஆகும்.

பூமி, சூரியனைச் சுற்றுவது வருடங்கள் எனவும்; சந்திரன், பூமியைச் சுற்றுவது மாதங்கள் எனவும் கணக்கிடப்படுகிறது.

பூமி, சூரியனைச் சுற்றிவரத் தோராயமாக  365 ¼ நாட்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு ¼ நாள் அதிகமாக இருக்கும். நான்கு வருடத்திற்கு ¼ நாள் சேர்ந்தால் 366 நாட்கள். லீப் வருடமாக மாறும்.

சந்திரன்,  பூமியைச் சுற்றிவர 29 ½ நாட்கள் ஆகும். ½ நாளை, அடுத்து வரும் மாதத்துடன் சேர்த்தால், 31 நாட்களாக மாறும். இதுவே 30, 31 என்ற வேறுபாட்டிற்கு காரணம்.

 

பழங்கால புத்தாண்டு எப்படி கணக்கிடப்பட்டது?

வெர்னல் ஈக்குவினாக்ஸ் (Vernal Equinox)

வெர்னல் ஈக்குவினாக்ஸ் என்பது இரவும் பகலும் சமமான காலஅளவில் இருப்பதை குறிக்கும். அதாவது, பகல் 12 மணி நேரம்; இரவும் 12 மணி நேரம் என சமஅளவில் இருக்கும்.

வருடத்திற்கு இருமுறை மட்டுமே நிகழும். மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் நிகழும்.

பழங்காலத்தில், மார்ச் மாதத்தில் நிகழும் ‘வெர்னல் ஈக்குவினாக்ஸ்’ நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதுவே, பல இனத்தவர்கள், பலஆயிரம் வருடங்களுக்குமுன் கடைபிடித்த வருடப்பிறப்பு. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவே கடைபிடிக்கப்பட்டது.

ரோமானிய நாட்காட்டி, ஆங்கில நாட்காட்டியாக மாறிய கதை!

ரோமானிய காலண்டர் (Romania Calendar)

கி.மு. 800-ம் ஆண்டில் ரோமலஸ் என்பவர் ரோம் நகரத்தை நிறுவினார். எனவே, ரோமானியர்கள் எனப் பெயர் பெற்றனர்.

ரோமலஸ், உருவாக்கிய நாட்காட்டியே ரோமானியர்களின் முதல் நாட்காட்டி. பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருக்கும். வருடத்தின் முதல் மாதம் மார்ச்.

  1. மார்சியஸ் – Martius (March) 31,
  2. ஏப்ரலிஸ் – Aprilis (April) 30,
  3. மையுஸ் – Maius (May) 31,
  4. லுனியஸ் – Lunius (June) 30,
  5. குயின்டிலஸ் – Quintilis (July) 31,
  6. செக்ஸ்டைலஸ் – Sextilis (Augest) 30,
  7. செப்டம்பர் –  (September) 30,
  8. அக்டோபர் – (October) 31,
  9. நவம்பர் – (November) 30,
  10. டிசம்பர் – (December) 31.

மொத்தம் 304 நாட்கள்.

304 நாட்கள் ஏன்? 61 நாட்கள் எங்கே?

ரோமானியர்களுக்கு பனி என்றால் பிடிக்கவே பிடிக்காது. பனிப்பொழிவு நாட்களில் வெளியில் செல்லாமல் வசிப்பிடங்களிலேயே முடங்கிவிடுவர்.

எனவே, ரோமானியர்கள் 61 நாட்களை வெறுத்துள்ளனர். இதன் காரணமாகவே 10 மதங்களை மட்டுமே கணக்கிட்டுள்ளனர்.

நமா பாம்பில்லியஸ் நாட்காட்டி (Numa Pompilius Calendar)

நமா பாம்பில்லியஸ் என்பவர் 10 மாதங்களை, 12 மாதமாக மாற்றினார். ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களை வருடத்தின் கடைசியாக சேர்த்தார்.

  1. Martius – 31 days
  2. Aprilis – 29 days
  3. Maius – 31 days
  4. Iunius – 29 days
  5. Quintilis – 31 days
  6. Sextilis – 29 days
  7. September – 29 days
  8. October – 31 days
  9. November – 29 days
  10. December – 29 days
  11. Ianuarius – 29 days
  12. Februarius – 28 days

மொத்தம் 355 நாட்கள்.

இந்நாட்காட்டி, சந்திர மற்றும் சூரிய கிரகணத்தை பொறுத்து அமைக்கப்பட்டது. இருப்பினும், 10 நாட்கள் குறைவாகவே இருந்தது.

பிப்ரவரியை பந்தாடிய மேக்சிமஸ்

நமா பாம்பில்லியசுக்கு பிறகு வந்த ரோம் ஆட்சியாளர்கள், நாட்களைக் குறைப்பதும், கூட்டுவதும்; மாதங்களைக் குறைப்பதும் கூட்டுவதுமாக இருந்துள்ளனர்.

கடைசி மாதமான பிப்ரவரியைப் பந்தாடிக்கொண்டே இருந்துள்ளனர். அதை ஒரு மாதமாகவே பொருட்படுத்துவது இல்லை.

20 நாட்கள், 23 நாட்கள், 27, 28, 29 என அவரவர் இஷ்டத்திற்கு மாற்றியமைத்துள்ளனர். அங்குள்ள அரசியல் குளறுபடிகளால், ஒருவர் செயல்படுத்துவதை அடுத்து வரும் ஆட்சியர் ஏற்றுக்கொள்வதில்லை.

  1. Martius – 31 days
  2. Aprilis – 29 days
  3. Maius – 31 days
  4. Iunius – 29 days
  5. Quintilis – 31 days
  6. Sextilis – 29 days
  7. September – 29 days
  8. October – 31 days
  9. November – 29 days
  10. December – 29 days
  11. Ianuarius – 29 days
  12. Februarius – 28 days
  13. Mercedonius – 23 days

பான்டிபெக்ஸ் மேக்சிமஸ் (pontifex maximus) என்பவர் ஒரு வருடத்தை 377, 378 நாட்கள் எனவும் 13 மாதங்கள் எனவும் மாற்றினார்.

ஜூலியன் நாட்காட்டி (Julian Calendar)

கி.மு. 45-ம் ஆண்டு ரோமானிய மன்னனாக ஜூலியஸ் சீசர் பதவியேற்றார். இவர் ஒரு சர்வாதிகார ஆட்சியர் எனப் பெயரெடுத்தவர்.

ஜனவரி மாதத்தை முதல் மாதமாக அறிவித்தார். ஜனஸ் என்ற ரோமானிய தெய்வத்தைக் குறிக்கும் சொல் லனவரிஸ். அதுவே, ஜனவரி என மாறியது.

வானியல் ஆய்வாளர்கள் பலரின் உதவியோடு, நாள்காட்டியில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் அடிப்படையில் மாதங்களை மாற்றியமைத்தார்.

வானியல் அறிஞர் சொசிசெனசு என்பவரின் முக்கிய ஆலோசனைப்படி, வருடத்திற்கு 365 நாட்கள் எனவும்; 4 வருடத்திற்கு ஒருமுறை லீப் வருடம் எனவும் மாற்றியமைக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசர் இறந்ததற்கு பின்பு, அவருடைய ஆதரவாளர்கள், குயின்டிலஸ் மாதத்தை ஜூலை எனப் பெயர் மாற்றினர். ஜூலியசின் வளர்ப்புமகன் ஆகஸ்டஸ் பெயரை செக்ஸ்டைலஸ் மாதத்திற்கு சூட்டினர்.

ஜூலியஸ் சீசரும் ஆகஸ்டசும் சரிக்குச்சமமானவர்கள் என ஜூலை, ஆகஸ்டு இரண்டு மாதங்களுக்குமே 31 நாட்கள் என மாற்றினர். 29-தாக இருந்த பிப்ரவரி 28 நாட்களாக மாறியது.

இதுவே தற்பொழுது கடைப்பிடிக்கும் நாட்காட்டி. ஆனால், அதிலும் ஒரு குறை இருந்தது.

கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

கி.பி 1582-ம் ஆண்டு பதிமூன்றாம் போப் கிரகோரி, ஜூலியன் நாள்காட்டியில் உள்ள பிழையை மாற்றியமைத்தார்.

அப்போது, மருத்துவராக இருந்த அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் ஜீலியன் நாட்காட்டியில் 11 நிமிடம், 14 வினாடி அதிகமாக உள்ளதைக் கண்டறிந்தார்.

இதனால், ஒவ்வொரு 130 வருடத்திற்கும், ஒரு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. எனவே, புனிதவெள்ளி பண்டிகை வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருந்தது.

அதாவது பூமி, சூரியனை முழுமையாக சுற்றிவரத் துல்லியமாக 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422) ஆகிறது. ஆனால், சூலியஸ் சீசர் 365.25 என்ற முறையில் தோராயமாக நாட்காட்டியை உருவாக்கியிருந்தார்.

இதன்படி, நான்கு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளைச் சேர்த்தால், 130 ஆண்டுகளுக்கு 24.22  மணி நேரம் அதிகமாகும்.

அதைச் சரிசெய்ய, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும், ஒரு லீப் ஆண்டு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

அதாவது, 100-ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 100-லும் 400-லும் வகுபடும் ஆண்டுகள் மட்டுமே லீப் ஆண்டுகளாக கணக்கிடப்பட்டது.

எடுத்துக்காட்டு:-

1700, 1800, 1900 லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 1600, 2000 லீப் வருடங்கள். அடுத்து 2400-வது வருடம் லீப் நூற்றாண்டு வருடமாகும். இடையில் உள்ள 3 நூற்றாண்டுகளின் துவக்க வருடம் (2100,2200,2300) கணக்கில் கொள்ளப்படாது.

இதன் மூலம், 130 வருடங்களுக்கு ஒருமுறை, 1 நாளைக் குறைக்க இயலும்.

கிரகோரியன் நாள்காட்டி மிகச்சரியானதா?

கிரகோரியன் நாள்காட்டியில் சராசரியாக 365.2425 என ஒரு வருடத்தின் அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது துல்லியமானது. ஆனால், மிகத்துல்லியமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வருடத்திற்கும் 27 வினாடிகள் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு 3236 வருடத்திற்கு 1 நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

தற்போது, நாம் பயன்படுத்தி வரும் (கிரகோரியன்) நாட்காட்டிப்படி, 4909-ம் வருடம் ஒருநாள் அதிகமாகும்.

எனவே, இந்த நாட்காட்டியும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், 4909-ம் ஆண்டிற்கு பிறகு நாட்கள் மாறிச்செல்லும்.

கிரகோரியன் நாள்காட்டியே பிற்காலத்தில் உலக நாட்காட்டியாக மாறியது! – English Calendar History

13-ம் போப், இந்நாட்காட்டியை நடைமுறைப்படுத்தினாலும் அனைவரும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை.

நாளடைவில் இதுவே துல்லியமாகவும், எளிமையாகவும் இருந்ததால் அனைவரும் இந்த நாட்காட்டியைப் பின்பற்றத் துவங்கினர்.

ரோமானிய நாட்காட்டியே பிற்காலத்தில் ஆங்கில நாட்காட்டி எனப்பெயர் பெற்றது. ஆங்கில நாட்காட்டி இன்று உலக நாட்காட்டியாக மாறியுள்ளது.

நாட்காட்டியை பின்பற்றிய நாடுகளும், வருடங்களும் – English Calendar History

1582: ஸ்பெயின், போர்சுகல், பிரான்சு, போலந்து, இத்தாலி
1610: புருசியா
1700: ஜெர்மனி, சுவிஸ்லாந்து, நார்வே, டென்மார்க்
1873: ஜப்பான்
1912: சீனா, அல்பேனியா
1752: பிரிட்டிஷ்
1875: எகிப்து
1753: சுவீடன் மற்றும் பின்லாந்து
1896: கொரியா
1918: சோவியத் ஒன்றியம், எஸ்தானியா
1919: ரொமேனியா, யூகோசுலோவியா
1923: கிரீஸ்
1926: துருக்கி

வெள்ளையர்கள் ஆட்சிக்குப்பின், இந்தியாவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. கணினி மற்றும் இண்டர்நேசனல் நாட்காட்டியாக ரோமானிய நாட்காட்டி மாறிவிட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here