மார்கழி மாதக் கோலம்: கன்னிப் பெண்ணே கேட்டுக்கோ!

மார்கழி மாதக் கோலம்

மார்கழி மாதக் கோலம்: கன்னிப் பெண்ணே கேட்டுக்கோ!

கோலம் என்பது ஒரு கலை. அக்கலையில் திறம்படச் செயல்பட்டவர்கள் பழங்காலத் தமிழ் பெண்கள்.

கோலம் தோன்றிய வரலாறு!

ஓவியத்தின் ஒரு பகுதியே கோலம். இருப்பினும், கோலம் தனித்துவம் பெற்றதற்கான காரணம் பல.

முதன்முதலில் மார்கழி மாதமே, வாசலில் கோலமிட ஆரம்பித்தனர். அதன்பிறகே எல்லா மாதமும் வாசலில் கோலமிடும் வழக்கம், நடைமுறைக்கு வந்தது.

மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு

மார்கழி மாதம் என்பது கடும்குளிர் காலம். இக்காலத்தில் ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவ ராசிகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

குளிர்காலம் என்றாலே எறும்புகள், மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்துவிடும். கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்களில் மொய்க்கத் துவங்கிவிடும்.

ஈ, எறும்பிற்குகூட கருணை காட்டுபவர்கள் நம்மவர்கள். அதைக் கொல்லுவதற்கு மனமில்லை. அதேநேரம் அவற்றை எப்படி தடுப்பது? என சிந்தித்தபின் உதயமானதே கோலம்.

தினமும் அதிகாலை எழுந்து, அரிசிமாவில் வாசலில் கோலமிடுவார்கள். இதனால் எறும்புகள், வாசலிலேயே உணவு கிடைத்துவிடுவதால் வீட்டிற்குள் நுழைவதில்லை.

இதற்காக உருவானதே வாசலில் கோலமிடும் வழக்கம்.

மார்கழி மாத அறிவியல் காரணம்

மார்கழி மாதம் அதிகாலை, பூமியின் காற்று மண்டலத்தில் தூய ஆக்சிஜன் (மிகத் துய்மையான சுவாசக்காற்று) நிறைந்திருக்கும். இது மருத்துவ குணம் கொண்டது.

இதனால், அதிகாலை எழுவதால் தூய ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதை சுவாசிப்பதால் உடல் நீண்ட ஆரோக்கியம் பெரும், சுறுசுறுப்படையும்.

பூசணிப்பூக் கோலம்

மார்கழி மாதம் கோலமிடுவதில் ஒரு சிறப்பு காணப்படும். கோலத்தின் நடுவில் மாட்டுச்சாணத்தில் பூசணிப்பூ சொருகி வைக்கப்பட்டிருக்கும். இதற்கு இருவேறு காரணங்கள் உண்டு.

பூசணிப்பூ மார்கழி மாதத்தில் பூக்கும் பூ. மஞ்சள் நிறப் பூ. மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, அதை வாசலில் வைப்பதால் இறையருள் கிடைக்கும் என்பது ஒரு காரணம்.

பூசணிப்பூ இருக்கும் வீட்டில் கல்யாண வயதில் கன்னிப்பெண் உள்ளார் என்று அர்த்தமாம். அவ்வழியே செல்லும் உறவினர்கள், ஊரார்கள்.. நல்ல வரன்கள் இருந்தால் பெண் கேட்டு வருவார்கள்.

பழங்காலத்தில் பூசணிப்பூவால் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம். பூசணிப்பூவை தலையில் வைத்துக்கொள்வது கூட வழக்கமாம்.

சுண்ணாம்பைத் தவிர்த்து கலர் கோலமிடுவது எப்படி?

இப்பொழுதுள்ள பெண்கள் கோலம் என்ற வார்த்தைகூட தெரியாமல் வளர்ந்து வருகின்றனர். கோலமிட்டாலும் சுண்ணாம்பைப் பயன்படுத்துகின்றனர்.

முதலில் சுண்ணாம்புக் கோலப்பொடிகளைத் தூக்கியெறியுங்கள். அதற்கு நீங்கள் கோலமிடாமல் இருப்பதே சிறந்தது.

உண்மையில் கோலமிட நினைப்பவர்கள், அரிசிமாவைப் பயன்படுத்துங்கள். அதில் வண்ணம் தீட்ட வேண்டும் என்றால், வண்ணப்பூக்களை பயன்படுத்துங்கள்.

பார்பதற்கே அவ்வளவு ரம்யமாக இருக்கும். ஈ, எறும்பு, தேனீ எனப் பல உயிரினம் தினம்தோறும் உங்களால் வாழ்வு பெரும்.