Home வரலாறு Mamallapuram: மாமல்லபுரம் எனப் பெயர் வந்தது எப்படி?

Mamallapuram: மாமல்லபுரம் எனப் பெயர் வந்தது எப்படி?

அப்பேற்பட்டநம் தமிழகத்தின்அதிசயம் , காலங்களைக் கடந்து நம் கண்களையும் கருத்தையும் கவரும் “மஹாபலிபுரம்” . அத்தகைய மாமல்லபுரத்தில் தான் நமது பாரதப் பிரதமரும் , சீன அதிபரும் சந்தித்து உரையாடினர் , இது நமக்கு ஒரு கூடுதல் பெருமை ! நம் வரலாற்றை அறிவோம் , ஒப்பற்ற நம் மாமன்னர்களைப் போற்றுவோம்.

592
0

Mamallapuram: மாமல்லபுரம் ஏன் இந்த இடத்திற்கு இப்படி ஒரு பெயர் வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் ஏன் மாமல்லன் என அழைக்கப்பட்டான்?

தமிழகத்தில் பல்லவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டனர். இதில் பல்லவர்கள் ஆட்சி காலமே தமிழக கட்டிடக் கலையின் திருப்பு முனையாக அமைந்தது.

இவர்களின் கட்டக்கலையை கண்டு வியந்த பலரும் இவர்களை பின்பற்றி கற்கோவில்களை தமிழகமெங்கும் கட்டினர். தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு பல்லவர்களின் காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கட்டிட சிறப்பே அடிதளமாக அமைந்தது என்று வரலாறு கூறுகின்றன. அப்படிப்பட்ட பல்லவ சிற்ப கலையின் அதிசயமே மாமல்லபுரம் கடற்கரை கோவிலாகும்.

மாமல்லபுரம் (Mamallapuram):

முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் ஏறக்குறைய 25 ஆண்டு காலம் பல்லவ அரசராக நல்லாட்சி புரிந்தார். சமண சமயத்தை தழுவிய அந்த அரசர், அப்பர் என்று அழைக்கப்பெற்ற சைவ நாயன்மார்களுள் ஒருவரான திரு நாவுக்கரசர் அவர்களின் முயற்சியால் மீண்டும் சைவ மார்கத்திற்கே திரும்பினார் .

அதன் பிறகே பல்வேறு திருப்பணிகளை செய்து வைத்தார் . பல்லவ அரசர்களுள் கலா ரசனை அதிகமாய்க் கொண்டவரும் இவரே . 

தமிழகத்தின் தலைச்சிறந்த சிற்பிகளைக் கொண்டு ஒரு சொப்பன நகரத்தை உருவாக்க எண்ணினார். பல்லவ ஆட்சிக்குட்பட்ட கடல் மல்லை என்கிற மலைகள் நிறைந்த பகுதிகளை சிற்ப கலைக்கூடமாக மாற்ற முடிவெடுத்தார். மேலும் அக்காலத்தில் மிகப்பெரிய துறைமுக பட்டினமாக இருந்த இடமே கடல் மல்லை ஆகும்.

கடல் மல்லையாக இருந்த இந்த இடத்திற்கு மாமல்லபுரம் என்று தனது மகனின் பெயரை சூட்டினார்.

மாமல்லபுரம் எனப் பெயர் வருவதற்கான காரணம்

முதலாம் மகேந்திரவர்மன் தனது பெயரை வைக்காமல் தனது மகனின் பெயரை கடல் மல்லை பட்டினதிற்கு வைக்க பலரும் அறியாத காரணம் உள்ளது. முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவர்.

ஒருமுறை மகேந்திரவர்மரும், நரசிம்மவர்மரும் இக்கடற்கரை பட்டினத்திற்கு வந்து போது  ஒரு பாறையிடத்தே இருவரும் நின்று உரையாடி கொண்டிருந்த வேலையில் ஒரு பெரிய மேகக்கூட்டம் வானில் யானை போல தோன்றியதாம்.

சித்திரம் வரைவதில் கைதேர்ந்த நரசிம்மவர்மன் அந்த யானையை அப்படியே அப்பெரிய பாறையில் தீட்டினார். இதனை கண்ட மகேந்திர வர்மன் மனமகிழ்ந்து புதிய யோசனை தோன்றி அந்த பாறையை அப்படியே யானையாக வடித்தால் உலகுள்ளவரை அழியாது. எனவே இங்குள்ள பெரும் பாறைகளை கோவில்களாகவும், சிறு பாறைகளை இறை வாகனங்களாகவும் மாற்றிவிடலாம் என்று கூறி சிற்ப பணியை துவக்கி வைத்தார்.

மேலும் தன் மகனால் தான் தனக்கு சிற்ப கோவில்கள் அமைக்கும் எண்ணம் தோன்றியதால் அவரின் பெயரே வைத்தார் என்கிறது வரலாறு. “புரம்” என்பது சமஸ்கிருதத்தில் நகரம் அல்லது பட்டினம் என்பதாகும்.

மல்லன் என்றால்  மல்யுத்த வீரன் என்று பொருள். அந்த காலகட்டத்தில் இருந்த தலைச் சிறந்த மல்யுத்த வீரர்களை வென்றதனால் நரசிம்மப் பல்லவருக்கு மாமல்லன் என்கிற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

நரசிம்மபுரம் என்று பெயர் வைத்தால் அவருக்கு பிறகு பல நரசிம்மவர்மர்கள் வருவார்கள் இவர்களில் யாரால் உருவாக்கப்பட்டது என்று குழப்பம் வரலாம் என்பதற்காக முதலாம் நரசிம்மவர்மரின் பட்டப்பெயரான  மாமல்லன் என்ற பெயரில் “மாமல்லபுரம்” என்று பெயர் சூட்டினார்.

பல்லவ மன்னர்களின் திருப்பணிகள்

இப்படி சிற்பப்  பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்க, வாதாபியை தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்த சாளுக்கிய மன்னன் புலிக்கேசி காஞ்சி மாநகரை முற்றுகை இட்டான்.

காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாத விரக்தியில் பல்லவராஜ்யத்தின் பகுதிகளை தீக்கு இறையாக்கி திரும்பிச்சென்றான், அதன் பின்னர் சில நாட்களிலேயே மகேந்திரப் பல்லவர் இறந்துவிட்டார். சிலர் சாளுக்கியருடன் ஏற்பட்ட போரிலே அவர் இறந்ததாக கூறுவதும் உண்டு .

அதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் நரசிம்மர், பல்லவ ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை களைய ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் படைகளை திரட்டி, போர்க்கலைகளை வளர்த்துக்கொண்டு தளபதி பரஞ்சோதியுடன் வாதாபியை நோக்கி படையெடுத்துச் சென்றார் .

வரலாறே வியக்கும்படி சாளுக்கியர்களை வென்று வாதாபியை கைப்பற்றினார். “வாதாபி கொண்ட சிம்மன் “ எனவும் பெயர் பெற்றார்.

அந்த மாபெரும் வெற்றிக்கு பெரும் பங்கு ஆற்றிய பரஞ்சோதி தான் வாதாபியில் இருந்து பிள்ளையார் சிலையை தமிழகத்தில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லுவார் சிலர் .

அந்த பரஞ்சோதி அவர்களே பின்னாளில் சிறந்த சிவனடியாராக பெயர்ப்பெற்று “சிறுத்தொண்டர் “ என்று அழைக்கப்பட்டார்.

அப்படி வெற்றி வாகை சூடி வந்து மீண்டும் மாமல்லபுரம் பணிகளை மீண்டும் தொடங்கச் செய்தார் நரசிம்மப் பல்லவர்.

மாமல்லபுரத்தில் முதலில் கட்டிய குடைவரை கோவில் ஆதி வராகர் குகையாகும்.  அதன் பின் மும்மூர்த்திகள் குகையுமாகும்  இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் முதலாம் நரசிம்மவர்மன் காலத்திலும் கட்டபட்டதாகும்.

யாழி மண்டபம், பஞ்ச பாண்டவர் ரதம், பாகீரதன் தபசு, கடற்கரையில் அமைந்துள்ள கோவில்களானது இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டபட்டது. இவரே இராஜசிம்மர் என அழைக்கப்பட்டார். காஞ்சி கைலாசநாதர் கோவில் கட்ட துவங்கியதும் இவரே ஆவார்.

இப்படி இம்மாமல்லபுரமானது பல பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆயிர கணக்கான சிற்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்ப நகரமாகும்.

இன்று பலரும் வியக்கும் தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிற்ப நகரம் உருவாக்கப்பட்டது. இன்றளவும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி 1300 ஆண்டுகள் தாண்டி அதிசயிக்கும் வண்ணம் சிறந்து விளங்குகிறது.

இத்தகைய சிறப்புகள் பொருந்தியதால் தான் இவ்விடத்தை 1984-ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய சின்னம் என UNESCO அறிவித்தது.

அத்தகைய மாமல்லபுரத்தில் தான் நமது பாரதப் பிரதமரும், சீன அதிபரும் சந்தித்து உரையாடினர். இது பல்லவர்களுக்கும், சீனர்களுக்கும் இருந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக இருந்தது.

சா .ரா

Previous articleகொரோனா COVID19  நம்மை மிகவும் மென்மையாகவும், கருணையுடன் செயல்பட வைக்கிறது  – விராத் கோலி
Next article23/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here