Jayam Ravi; சாத்தான்குளம் கொடூரம்: சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை: ஜெயம் ரவி காட்டம்! சாத்தான்குளத்தில் நடந்த கொடூர சம்பவம் குறித்து நடிகர் ஜெயம் ரவி காட்டமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டத்தை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என்றும், மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் என்று சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ஜெயம் ரவி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது? இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.