Soorarai Pottru Making; கண்ணாலேயே நடித்தார்: சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங்! சூரரைப் போற்று மேக்கிங் குறித்து நடிகை விஷாலினி கருத்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள புதிய படம் சூரரைப் போற்று.
சூரரைப் போற்று
சூரரைப் போற்று படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில், சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற மாறனாக நடித்துள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, விஷாலினி, சம்பத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சூரரைப் போற்று டீசர்
சூரரைப் போற்று மேக்கிங்
இந்த நிலையில், சூரரைப் போற்று படம் குறித்து நடிகை விஷாலினி கருத்து தெரிவித்துள்ளார். இப்படம் எப்படி எடுக்கப்பட்டது, சூர்யா எப்படியெல்லாம் நடித்திருந்தார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
விஷாலினி சூர்யாவுக்கு மாமியாராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று மேக்கிங் குறித்து விஷாலினி கூறுகையில்: சூர்யா உடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று எனது ஆசை. நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.
இயக்குநர் சுதா கொங்கரா படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியான ஒருவரை தேர்வு செய்து கொண்டிருந்த நிலையில், நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.
நான் ஆடிசன் சென்று நடித்து காண்பித்த பிறகு அவர்களுக்கு பிடித்துப் போக ஓகே சொன்னார்.
சூர்யாவுக்கு மாமியாராக நடித்திருந்தாலும், ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகத்தான் ஒவ்வொரு காட்சியும் அமைந்திருக்கும்.
மாமியார், மருமகள், மருமகன்
மாமியார், மருமகள், மருமகன் ஆகியோருக்கு இடையில் இருக்கும் சண்டை சச்சரவுகள் படத்திலும் இருக்குமா? என்று கேள்வி எழுப்ப, அதையெல்லாம் இப்போது சொல்ல விரும்பவில்லை. படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
மேலும், அபர்ணா பாமுரளிக்கு இது இரண்டாவது படம். படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்திற்காக தனக்குத் தானே அர்ப்பணித்துக்கொண்டார். அவரது ரோலை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.
படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் இருக்கும் நிலையில், எல்லோருக்குமே திரையில் போதுமான இடம் கிடைக்கும். அதுதான் சுதா கொங்கராவின் சிறப்பான பணி. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கும்.
சூர்யா என்றாலே கடின உழைப்பு, உண்மையாக இருப்பார், அர்ப்பணிப்பு எல்லாமே இருக்கும். ஒர்க் அவுட் முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வந்தாலும், அப்படியே இருப்பார்.
எந்த அசதியும் அவரது முகத்திலும் தெரியாது. காலையில் எப்படி வருகிறாரோ அப்படியேத்தான் படப்பிடிப்பு முழுவதும் இருப்பார். முடிந்த பிறகும் இருப்பார்.
படத்தை அவர் தயாரித்திருந்தாலும், ஒரு தயாரிப்பாளராக அவர் நடந்து கொண்டது இல்லை. காலையில் 6 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை எடுக்கப்பட்ட ஒரு தொடர் வரிசை காட்சியின் போது சுட்டெரிக்கும் வெயிலிலும் அசராமல் நடித்தார். என்னால் நடிக்க முடியவில்லை.
கண்ணாலேயே நடிப்பார்
கண்ணாலேயே நடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. அவரது கண்ணிற்கு அப்படியொரு மகிமை இருக்கிறது. போதிதர்மனாக பார்க்கும் பொழுதே தெரிந்திருக்கும். அவரது கண்ணில் தான் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
நம்ம உக்காந்து உக்காந்து சோத்த சாப்பிட்டுக்கிட்டே இருப்போம். ஆனால், அவர் சோறு சாப்பிடுவாரா என்பதே தெரியாது. எனினும் பயங்கர பிட்னெசாக இருப்பார்.
அவர் ஒர்க் அவுட் மட்டுமல்ல, யோகா,டயட் கண்ட்ரோல் இப்படியெல்லாமே சேர்ந்துதான் அவர் பிட்னெசாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
54 இடங்களில், 66 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பிற்கு முன்பாகவே எல்லாவற்றையும் கச்சிதமாக திட்டமிட்டுக்கொள்வோம்.
மேலும், டயலாக், நடிப்பு எல்லாவற்றையும் படப்பிடிப்புக்கு முன்பே ஒரு முறை ரிகர்ஷல் (Pre Workshop) மாதிரி செய்து கொள்வோம். இதன் மூலம் நேரம் மிச்சப்படும். எனர்ஜி மிச்சம்.
இயக்குநருக்கு என்ன வேணுமோ அது கிடைக்கும் வரை விடமாட்டார்கள். மதுரை பற்றி தெரியாத ஒருவர் நான் டப்பிங் பேசும் போது இந்த டயலாக்கை இப்படி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்.
அதுதான் சுதா கொங்கரா. ஒரு அயர்ன் லேடியாக இருந்தாலும் கூட அவர் கோபப்பட்டதே இல்லை.
படத்திற்கு பாடல்களும் நன்றாக வந்துள்ளது. ஜிவி பிரகாஷ் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தளவிற்கு அவரது பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக கருத்து: சோஷியல் மெசேஜ்
பொதுவாக சூர்யா படம் என்றாலே இளைஞர்களுக்கு சமூக கருத்துக்களை கூறும் வகையில்தான் படம் இருக்கும்.
சூரரைப் போற்று ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக இருந்தாலும், படிக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு Motivation ஆக இருக்கும். இந்தப் படத்தின் மெசேஜ் கண்டிப்பாக இருக்கும்.
சூரரைப் போற்று, மாஸ்டர் ரெண்டுமே எனக்கு ரெண்டு கண். ரெண்டு படமும் நன்றாக வர வேண்டும் என்பது எனது ஆசை.
எந்தப் படத்திற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ சென்றுவிடுவேன் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.