Corona; இப்படியெல்லாம் இவங்க செய்வாங்களா? ஆச்சரியப்பட வைத்த சினிமா பிரபலங்கள்!
கொரோனா வைரஸ் (Corona Virus) நம்மை தாக்காமல் பாதுகாத்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பரவி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துகள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. இந்த நிலையில், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஒருவரிடமிருந்து, மற்றவருக்கு எளிதில் பரவக்கூடியது தொற்று நோய் கிருமியான கொரோனா.
ஆதலால், முகத்தில் மாஸ்க், அடிக்கடி கை கழுவுதல், வீட்டிற்குள்ளாகவே இருத்தல் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கொரொனா காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில், கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்.
அதன்படி, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட, சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் வீட்டிற்கு வெளியில், பால்கனியில் மொட்டை மாடியில் நின்று கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் சாப்பிடும் தட்டில் தாளம் போட்டார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், பவன் கல்யாண் ஆகியோர் மணி ஓசை எழுப்பினர்.
சிரஞ்சீவி தனது குடும்பத்தோடு வீட்டின் முன்பு நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார். பார்த்திபன், மனோபாலா, நீலிமா ராணி, மகத், கங்கனா ரணாவத் ஆகியோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான சப்னா சௌத்ரி, மோனாலிசா, ஹினா கான், அர்ஜூன் பிஜ்லானி, கரண் சிங் குரோவர், பிபாசா பாசு, இஷிதா தத்தா ஆகியோர் உள்பட பலரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.