தமிழகத்திற்குள் கள்ளத்துப்பாக்கி; நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு
மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில், நாகன்குளத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அவர் தாக்கல் செய்தமனு பின்வருமாறு, “தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது.
கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்ததாக காவல்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆயுத தடைச்சட்டத்தின் படி உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது குற்றம். ஆனால் சமீப காலமாக கள்ளத்துப்பாக்கி விற்பனை பெருகி உள்ளது.
வட மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகள் கள்ளத்தனமாக தமிழகத்திற்குள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகள், பணக்காரர்கள், கூலிப்படையினர் எனப் பலர் கள்ளத்துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இது பெரிய அச்சத்தை விளைவித்து உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இவற்றுக்கு முடிவு கட்டவேண்டும். கள்ளத்துப்பாக்கி தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, “மத்திய உள்துறை அமைச்சர், தேசியப் புலனாய்வு பிரிவு, சிபிஐ தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநிலப் பிரச்சனை இல்லை. எனவே 2 வாரத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும். தவறினால் நேரில் ஆஜராக வேண்டிய நிலை வரும் என உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.