பாகிஸ்தான் குடியுரிமை பெற்றார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி. பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டி நடைபெற உதவியதற்காக கௌரவ குடியுரிமை பெற உள்ளார்.
டி20 ஆண்கள் உலககோப்பையை 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு வாங்கித் தந்தவர் முன்னாள் கேப்டன் டேரன் சமி.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் 2016-ம் ஆண்டு முதல் விளையாடிக் கொண்டிருக்கும் டேரன் சமி பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
2017-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கோப்பையை பெஷாவர் அணிக்காக பெற்று தந்தவர் சமி. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆனார்.
கௌரவ குடியுரிமை
இதையடுத்து பெஷாவர் ஜால்மி அணியின் உரிமையாளர் பாகிஸ்தான் அதிபருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெற டேரன் சமியும் ஒரு காரணம், ஆகையால் அவருக்கு பாகிஸ்தான் குடியுரிமை மற்றும் விருதும் வழங்கிட வேண்டுமென்று கோரினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று டேரன் சமிக்கு இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் அதிபர் ஆரிப் அல்வி, கௌரவ குடியுரிமைக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்குகிறார்.