Dhanush; உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்: தனுஷ்! தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வட சென்னை, The Extraordinary Journey of the Fakir (ஆங்கிலம்), அசுரன் என்று பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார்.
நடிகர் மட்டுமல்லாமல், தன்னை ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகராகவும் காட்டிக் கொண்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
5ஆவது முறையாகவும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் இருக்கிறார்.
வட சென்னை, புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2 ஆம் பாகங்கள் உருவாக இருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் கடந்த 28 ஆம் தேதி 37ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்.
அனைத்து Common DPக்கள், Mashupக்கள், வீடியோக்கள் மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த Countdown டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி.
அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்!
மேலும், எனக்கு தொலைபேசி வாயிலாகவும், பத்திரிக்கை மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் அரசியல் பெருமக்கள்,
நண்பர்கள் மற்றும் பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.