சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் அன்னையர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த அன்னையர் தினம் அமைந்திருக்கிறது.
‘அன்னை’ இந்த ஒற்றை வார்த்தையில் அனைத்துமே அடங்கும். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண் என்றுமே எல்லோராலும் போற்றப்படும் படைப்பாகவே விளங்குகிறாள்.
அன்னை, சகோதரி, மனைவி, மகள், சிநேகிதி என பல அவதாரங்களில் பெண் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். ஆணின் வாழ்க்கை என்றுமே பெண்ணை சுற்றியே அமைகிறது.
அதில் மிகவும் சிறப்பாக அன்னை என்ற ஒற்றை சொல் அனைவரையும் கட்டிப்போட வல்லது. அவளின் தியாகங்கள் அளப்பரியவை. அவளின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லவே இல்லை.
அன்னையர் தினம் முதன் முதலில் 20-ம் நூற்றாண்டில் அண்ணா ஜார்விஸ் என்பவரால் ஐக்கிய நாடுகளில் கொண்டாட துவங்கப்பட்டது. பின்னர் உலகெங்கும் பரவி இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
1908 ஆம் ஆண்டில் முதன்முதலில் அன்னையர் தினம், மேற்கு வர்ஜீனியாவின் கிராப்டனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் கொண்டாடப்பட்டது.
அண்ணா ஜார்விஸ் தனது தாய்க்காக ஒரு நினைவுச்சின்னத்தை இந்த ஆலயத்தில் நிறுவினார். தொடக்கம் முதலே அன்னையர் தினம் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
செயின்ட் ஆண்ட்ரூஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் இன்றும் சர்வதேச அன்னையர் தின நினைவு சின்னம் உள்ளது. உலகெங்கும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக மாற்றுவதற்கான அவரது பிரச்சாரம் அவரது தாயார் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் இறந்த 1905 ஆம் ஆண்டில் தொடங்கியது.
ஒரு குழந்தையை கருவில் தாங்கிய நாள் முதலே தன்னுயிரில் சரிபாதியாய் அந்த குழந்தையை காப்பற்றி வளர்ப்பவன் தான் அன்னை. தன் குடும்பத்திற்க்காக அவள் செய்யும் தியாகங்கள் எண்ணற்றவை.
பண்டைய காலங்களில் அம்மாக்கள் வேலைக்கு செல்வது என்பது அரிதான ஒன்று. ஆனாலும் கூட்டு குடும்பங்களில், அன்றாட வேளைகளில், குழந்தை வளர்ப்பில் என அவர்களின் பங்கு சவால்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
இன்றைக்கும் அம்மா என்று சொன்னாலே அனைவருக்குமே நெகிழ்ச்சியாக தான் இருக்கும். நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு துணையாக நடந்து வரும் இன்னொரு நிழல் அவள்.
கணவனும் குழந்தைகளும் தான் அவளின் உலகம். இன்றைக்கு பெண்கள்
வேலைக்கு செல்கின்றனர். வேலையில் எவ்வளவு களைப்பே இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் அவளின் அன்றாட வேலைகளில் குறை வைப்பதில்லை.
அன்னை அருகிலேயே இருப்பவர்களை காட்டிலும் அன்னையை இழந்தவர்களுக்கு தான் அவளின் அருமை நன்றாக புரிகிறது. நமக்கு ஏதேனும் ஒன்று என்றால் நம் கண்கள் கலங்கும்முன் அவள் கலங்கிடுவாள்.
படிப்பறிவு இல்லையெனினும் கணவனை இழந்த பின்னும் தன் பிள்ளைகளை கூலி வேலை செய்தேனும் முன்னேற்றி விடுகிறாள். ஆனால் இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.
காரணம் தாயின் தியாகம் சேய்க்கு புரியாமல் போவதே. அவளின் தியாகத்தில் வளர்ந்தபின் அவளை மறைக்கின்றனர் பிள்ளைகள். விளைவு, பல தாய்மார்கள் முதியோர் இல்லங்களிலும் தெருக்களிலும் ஆதரவற்று உள்ளனர்
தாயின்றி எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்தாலே இந்த முதியோர் இல்லங்கள் இல்லாமற்போகும். தாய்மை போற்றுவோம்! அன்னையை பொக்கிஷமாய் பாதுகாப்போம்!