ஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள அம்மன் கோவில். காரைக்குடியில் புகழ்பெற்ற கொப்புடையம்மன் கோவில். ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் அன்னை ஆதி சக்தி கிராம தேவதையாக இருந்து மக்களை காத்து இரட்சித்து வருகிறாள்.
அவள் இல்லாத ஊர்களே கிடையாது என்பதை அறிவோம். அந்த பராசக்தியே கொப்புடையம்மன் என்ற திருநாமத்தோடு உள்ள ஊரே காரைக்குடி.
திருக்கோவில் வரலாறு
அடர்ந்த காரை மரங்கள் நிறைந்த காட்டு பகுதியை திருத்தி மக்கள் குடியேறியதால் காரைக்குடி என்ற பெயர்ப் பெற்றது இவ்வூர்.
இங்கே நடுநாயகியாக விளங்கும் கொப்புடையம்மன் காட்டம்மனின் தங்கையாவாள். காட்டமனுக்கு குழந்தைகள் உண்டு கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை.
ஒரு முறை கொப்புடையம்மன் காட்டம்மனின் பிள்ளைகளை பார்க்க ஆவளோடு சென்ற போது காட்டம்மன் குழந்தைகளை மறைத்து வைத்து விட்டாள்.
தம் சகோதரியின் இச்செயலை அறிந்து மன வேதனையோடு திரும்பினால் கொப்புடையம்மன். காட்டம்மன் மறைத்து வைத்த குழந்தைகள் கல்லாய் ஆனது.
கொப்புடையம்மன் அதன் பின் இங்கே வந்து அமர்ந்தாள் என்று கூறுகின்றனர்.
ஆதிசங்கரர் வழிபட்ட தலம்
ஆதி சங்கரர் இந்த திருக்கோவிலுக்கு வந்து அம்பிகையை வழிபட்டுள்ளார்.
இந்த அம்பிகை ஸ்ரீசக்ரத்தின் மீது அமர்ந்து கிழக்கு முகம் நோக்கி காட்சி தருகிறாள். இவள் துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் அம்சம் ஆவாள்.
மேலும் இங்கு சிதம்பர நடராசர் கோவிலை போலவே உற்சவரே மூலவராக அம்பிகை காட்சி தருகிறாள்.
சூலம், பாசம், கபாலம் தாங்கி அபயத்தோடு கருணை பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறாள் அம்பிகை.
சித்திரை கடை செவ்வாய் இவளுக்கு பெரும் திருவிழா நடத்தப்பட்டு திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
வளங்களை அருள்வாள் கொப்புடையம்மன்!
அம்பிகையை தரிசித்து வழிபட்டாலே கல்வி, செல்வம், வீடுபேறு என அனைத்தும் வாரி வழங்குவாள்.
அனைவரும் காரைக்குடி சென்று கொப்புடையம்மனை தரிசித்து அவள் அருகில் வாழ்வாங்கு வாழ்வோம்.
அமைவிடம்: அருள்மிகு கொப்புடையம்மன் திருக்கோவில், காரைக்குடி.
தரிசன நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் 8 வரை.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!