மாசி மகம் எப்படி தோன்றியது? எவ்வாறு கொண்டாடப்படுகிறது? மாகா மகத்தின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? கும்பகோணம் தீர்த்தவாரி.
கும்ப மாதம் என்று கூறப்படும் மாசி மாதத்தில் தெய்வங்களுக்கான பல்வேறு விரத தினங்களும், விழாக்களும் உள்ளன.
அதில் குறிப்பாக சிவ பெருமானிற்கான விழாக்கள் பல. மகா சிவராத்திரி விழாவும் இந்த மாசி மாதத்தில் தான் வருகின்றது.
அதேபோல் மாசி மகம் இன்னும் ஒரு சிறப்பான நாளாகும்.
மாசி மகம் எப்படி தோன்றியது? சிறப்புகள் என்ன?
கும்ப மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். சந்திரன் சிம்ம ராசி, மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளே மாசி மகம் ஆகும். மகம் கேதுவிற்குறிய நட்சத்திரம் ஆகும்.
கும்ப ராசியில் இருக்கும் சூரியனும் சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனும் நேருக்கு நேராக மாசி மகத்தில் பார்கின்றனர்.
வருடத்திற்கு ஒரு முறை வருவது மாசி மகம் என்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது மகா மகம் ஆகும். இதனை வடநாட்டில் கும்ப மேளா என்று அழைக்கின்றனர்.
மாசி மகத்தின் வரலாறு
வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து கடலில் ஒளித்து வைத்தது. இதனால் உயிரினங்கள் மழை இன்றியும் நீரின்றியும் வாடியது.
வருணன் தன் பாவம் போக்க வேண்டி சிவனை வேண்டித் தவம் புரிந்தார்.
சிவனும் மனம் குளிர்ந்து வருணனின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார். வருணனின் பாவம் போக்கிய நாளே மாசி மகமாகும்.
இந்நாளில் நதி மற்றும் கடலில் நீராடினால் அனைத்து பாவங்களும் தொலையும்.
மேலும் தட்சனின் மகளாக தாட்சாயிணியாக அம்பிகை பிறந்ததும் இந்த மாசி மக நன்னாளில் தான்.
மாசி மக நன்னாளில் இறைவனை வேண்டி ஆறு மற்றும் கடலில் நீராடினால் பாவங்கள் தொலையும்.
மாசி மகம் கடலாட்டு விழா
மாசி மகத்தில் கடலாட்டு விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடலாட்டு விழா பல கோயில்களில் நடைபெறும்.
இந்த விழா மிகவும் தொன்மையானது. திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க பாடிய பதிகங்களில் மாசி கடலாட்டு உற்சவம் பற்றி கூறி உள்ளார்.
“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான் அடல் ஆனேறு ஊரும் அடிகளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!!”
என்று பாடியுள்ளார். இதிலிருந்து மாசி மக விழாவானது தமிழர்கள் வாழ்வில் ஒன்றியது என்பதை தெளிவாக உணரலாம்
கும்பகோணம் தீர்த்தவாரி
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மகா மக குலத்தில் இந்த நாளிலே தீர்த்தவாரி நடக்கும்.
அங்கு சென்று நீராடினால் கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, துங்கபத்ரை, சிந்து, தாமிரபரணி, கிருஷ்ணா, வைகை, பிரம்மபுத்ரா என பன்னிரண்டு தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைத்து பாவங்கள் தீரும்.
மாசி மகம் பெருமாள் வழிபாடு
மாசி மகமானது சிவன், திருமால் ஆகிய இருவருக்கும் உகந்த நாளாகும்.
சூரிய நாராயணராக விளங்க கூடிய பெருமாளிற்கு பூசனைகள் செய்து. திருமால் கோயில்களில் திருகல்யாணம் மற்றும் சத்திய நாராயண பூசைகள் செய்வர்.
இந்த பௌர்ணமி தினத்தினை “கதிரி பௌர்ணமி” என்று வைணவத்தில் கூறுவர்.
ஆயிரம் கோடி கதிர்களை கொண்ட சூரிய நாராயண பெருமாளிற்கு உகந்த பௌர்ணமி என்று அர்த்தம்.
மாசி மகம் குல தெய்வ வழிபாடு
மேலும் இந்த மாசி மக பௌர்ணமியானது குல தெய்வங்களை வழிபட உகந்த நன்னாள் ஆகும்.
குடும்பத்தில் மூத்த முன்னோர்கள், மாவீரர்கள், தியாகம் செய்தவர்களை தான் பெரும்பாலும் குல தெய்வமாக வழிபடுவர்.
கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குல தெய்வ வழிபாடு செய்வது பன்மடங்கு பலன் தரும்.
2020 இல் மாசி மகம்
இந்த ஆண்டு மாசி மகமானது நாளை மார்ச் 8 ஞாயிறன்று வருகிறது. இயன்றவர்கள் கும்பகோணம் சென்று மகாமக குளத்தில் நீராடியும் மற்றவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி புண்ணியம் பெறுவோம்.
சிவன் மற்றும் திருமால் ஆலயங்கள் சென்று இறைவனை தரிசித்து பாவங்கள் நீங்கப் பெற்று சந்ததிகள் மென்மேலும் வளர பிராத்திப்போம்.