A R Rahman; வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது: ரஹ்மான்! கொரோனா வைரஸுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சுயநலமற்று தைரியமாக மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி. நம்மைக் காப்பாற்ற தங்களது உயிரையே பணயம் வைத்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது. மனிதநேயம், ஆன்மீகம் ஆகியவற்றின் மகத்துவத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம். உறவினர்கள், முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.
கடவுள் நம் மனதில் இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இது இல்லை. அரசின் அறிவுரைகளை கேட்டு மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும். வதந்திகளை பரப்பி மக்களிடையே அச்சத்தை உருவாக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.