NOTA Movie Review | நோட்டா ஜெ.வோட சீக்ரெட்டா? கதையில் வரும் காட்சிகள் யாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அது ஆனந்த் ஷங்கருக்கே வெளிச்சம்.
நோட்டா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம். முழுக்க முழுக்க தமிழக அரசியலை பின்னணியாக வைத்து, தன்னுடைய கற்பனையை திணித்துள்ளார் ஆனந்த் சங்கர்.
ஜெ. கோமாவில் இருக்கும்போது, அவருக்கு ஒரு மகன் இருந்து, மகனை முதலமைச்சராக்கினால் என்ன நடந்திருக்கும். இது தான் படத்தின் ஒன்லைன்.
உண்மையில் இது ஜெ. பற்றியதா, அவரை மனதில் வைத்துதான் இந்த கதை எழுதப்பட்டதா என ஆனந்த் சங்கர் தான் விளக்க வேண்டும்.
நோட்டா படத்தை கட்சியுடனும், ஜெ.வுடனும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சிகளும் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.
படம் எப்படி?
இதுவரை ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த தேவரகொண்டா, வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இதில் ரொமான்ஸ் செய்வதற்கு வேலையே இல்லை. காதலியும் இல்லை.
படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே தேவரகொண்டா முதலமைச்சர். அடுத்தடுத்து சூடுபிடிக்கும் காட்சிகள். ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டும் இசை, படத்திற்கு பலம்.
ஆனால் இரண்டாம்பாதி ஏமாற்றமே. அரசியலில் பின்னிப்பெடலெடுப்பார் எனப் பார்த்தால், நாற்காலியை தக்கவைக்கும் போட்டியாக கதை மாறிவிட்டது. இதனால் படத்தில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.
தமிழகத்தின் அவலங்களை மறைமுகமாக ஆனந்த்சங்கர் சுட்டிக்காட்டினாலும், திரைக்கதையை பலவீனமாக அமைத்துவிட்டார். திரைக்கதையை மட்டும் இன்னும் பலப்படுத்தியிருந்தால் முதல்வன் 2 என்று கூடப் பேசப்பட்டிருக்கும்.
அரிமா நம்பி போன்ற படம் கொடுப்பார் என நினைத்தால், இருமுகன் போன்ற படத்தை கொடுத்துள்ளார் ஆனந்த்ஷங்கர்.
மொத்தத்தில் நோட்டா ஜெ.வோட சீக்ரெட்டா?