NZvsIND 2020: கருப்பு சட்டை நியூசிலாந்துக்கு வெள்ளை அடித்தது 5-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது.
நியூசிலாந்து vs இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்து உள்ளது.
இதுவரை எந்த அணியும் டி20 போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது கிடையாது. இந்தியா இந்தச் சாதனையை நியூசிலாந்துக்கு எதிராக நிகழ்த்தியுள்ளது.
இந்திய அணி முதலில் பேட்டிங்
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது.
ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இந்திய அணி 140 ரன்களைக் கடந்த நிலையில் 17-வது ஓவரில் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.
அதன்பிறகு களம் இறங்கிய சிவம் துபே சரியாக விளையாடவில்லை. இதனால் இந்தியாவின் ரன்ரேட் குறைந்தது. இறுதி ஓவரில் பாண்டேவின் விலாசலால் இந்தியா 163 ரன்களை எட்டியது.
நியூசிலாந்து பேட்டிங்
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பதில் கே.எல்.ராகுல் அணியை வழி நடத்தினார்.
இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்து வீசினார். 3.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து தடுமாறியது.
பேட்டிங்கில் சொதப்பிய சிவம் துபே 10-வது ஓவரை வீசினார். இந்த ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. வரலாற்றில் மோசமான சாதனையைப் பதிவு செய்தார் சிவம் துபே.
10-வது ஓவரில் மட்டும் 34 ரன்கள் வாரி வழங்கினார் துபே. இது ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் என்ற மோசமான சாதனைப்பட்டியலில் இடம் பெற்றது.
இதற்கு முன் இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் எடுத்ததுவே, ஒரு ஓவரில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு சிவம் துபேவிற்கு ஓவரே வழங்கவில்லை. துபேவின் விளையாட்டு, உண்மையில் அவர் ஆல்ரவுண்டரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பின்னர், வாஷிங்டன் சுந்தர், பும்ரா அபாராமாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
மீண்டும் சூப்பர் ஓவரா?
20-வது ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவை; கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. சோதி 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மீண்டும் சூப்பர் ஓவர் வந்துவிடுமோ என்ற பரபரப்பு இறுதி இரண்டு பந்துகளில் தொற்றிக்கொண்டது. ஆனால் டாட் பால் வீசினார் தாக்கூர்.
இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கருப்பு சட்டை அணியை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அனுப்பியது.