பங்குனி உத்திரம் என்றால் என்ன? பங்குனி உத்திரத்தின் தொன்மை என்ன? கல்யாண வரம் வழங்கும் பங்குனி உத்திர விரதம் எப்படி இருப்பது?
தமிழர் பாரம்பரியத்தில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.
அந்த வரிசையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகின்ற விழாவே பங்குனி உத்திர விழாவாகும்.
பங்குனி உத்திரம்
தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனியாகும் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம் ஆகும். இந்த இரண்டும் சேர்த்து வருகின்ற திருநாளே பங்குனி உத்திரம்.
பன்னிருக்கை வேலவனுக்கு உகந்த நாளாக இந்நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளிலும் விழா எடுத்து இந்நாளை கொண்டாடுகின்றனர்.
இந்த பங்குனி உத்தர விழாவானது மிகவும் தொன்மையானது. திருமயிலையில் பூம்பாவையை உயிர்பிக்கும் பதிகத்தில் திருஞானசம்பந்தர் இந்த பங்குனி உத்திர விழாவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்ற பதிகத்தின் மூலம் இந்த விழாவின் தொன்மையை அறிய முடியும்.
பங்குனி உத்திர தெய்வ திருமணங்கள்
பங்குனி உத்திர விழாவானது முருகனுக்கு மட்டும் உகந்த நாள் இல்லை. இன்னும் பல தெய்வங்களுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
இராமர் சீதையை மணந்த நாள் பங்குனி உத்திரம் ஆகும். இமவான் மகள் பார்வதியை சிவ பெருமான் இந்நாளில் தான் மணம் புரிந்தார்.
மகாலட்சுமியை திருமால் தன் மார்பில் இந்நாளில் தான் இடமளித்தார். தெய்வானையை திருபரங்குன்றத்தில் முருகப்பெருமான் மணந்ததும் இந்நாளில் தான்.
காஞ்சி காமாட்சி மணலில் சிவனை வணங்கி சிவனோடு வாம பாகம் ஏறியதும் இந்த நன்னாளில் தான். மீனாட்சி சுந்தரேசரை கரம்பிடித்ததும் பங்குனி உத்திரத்தில் தான்.
சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்தது இந்த திருநாளில் தான். ஐயன் ஐயப்பன் அவதரித்த நாளும் இந்த நாளில் தான்.
இவ்வாறு பல தெய்வ திருமணங்கள் இந்த சிறப்பு மிக்க பங்குனி உத்திரத்தில் தான் நடைபெற்றது.
திருமண வரம் தரும் கல்யாண விரதம்
இந்த பங்குனி உத்திர நாளில் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் திருமண வரம் வேண்டி விரதமிருந்தால் கண்டிப்பாக திருமணம் நடைபெறும் என்பது கண்கூடான உண்மையாகும்.
ஆண், பெண் இருபாலரும் காலையில் எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
காலை முதல் உண்ணா நோன்பிருந்து மாலை திருக்கோயில் சென்று திருமண கோலத்தில் இறைவனை தரிசித்து வந்து விரதம் முடிக்க வேண்டும்.
அனைத்து சிவ, விஷ்ணு, அம்பாள், முருகன் ஆலயத்திலும் கல்யாண உற்சவம் இந்நாளில் நடத்தப்படுகின்றது.
இதனை தவறாமல் திருமண வரம் வேண்டுவோர் சென்று கண்டு வர விரைவில் திருமணம் கைகூடும். எனவே தான் பங்குனி உத்திர நாளை “கல்யாண விரத நாள்” என்று கூறுவர்.
முருகனுக்கு காவடி எடுத்தல்
முருகனுக்கு முதன் முறையாக இடும்பன் காவடி கட்டியது இந்த பங்குனி உத்திர நாளில் தான்.
எனவே தான் இன்றும் திருஆவிநன்குடி என்று சொல்லப்படுகின்ற பழனியில் இன்றும் இத்தினத்தில் காவடி எடுத்து சென்று நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
2020 இல் பங்குனி உத்திரம்
இந்த வருடம் பங்குனி உத்திர விழாவானது இன்று ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இன்னல்கள் நிறைந்த சூழலில் கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க இயலாத நிலையில் உள்ளோம்.
எனவே நாம் அனைவரும் வீட்டில் இருந்தப் படியே இறைவனை பிராத்தனை செய்து இச்சூழலை மாற்றி அமைத்து இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்திப்போம்.
Excited. ! First time hearing the specialties of panguni uthiram.