கருப்பி போன்று கர்ணன் குதிரை; சம்பவம் நிச்சயம் உண்டு. பரியேறும் பெருமாள் கருப்பி என்ற நாய் கதாப்பாத்திரம் போன்று கர்ணன் படத்தில் குதிரை கதாப்பாத்திரம் உள்ளதாம்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தப் படம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரியேறும் பெருமாள் கருப்பி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள்.
ஜாதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கருப்பி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நாயும் இடம் பெற்றிருந்தது.
இதில், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கதிர், சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அங்கு உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த ஆனந்தியும் படிக்கிறார். இருவரும் நட்பாக பழக, ஒரு கட்டத்தில் ஆனந்திக்கு கதிர் மீது காதல் வருகிறது.
ஆனால், இதிலிருந்து முற்றிலும் கதிர் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், கதிருடன் ஆனந்தி பழகுவதை விரும்பாத ஆனந்தியின் அண்ணன், கதிரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.
இதற்கு முதல் பலி கதிர் வளர்த்து வந்த கருப்பி என்ற நாய். இப்படி பல வன்கொடுமைகளை சந்தித்து வந்த கதிர் சட்டப் படிப்பை முடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.
இது ஒரு புறம் இருக்க, அண்மைக் காலமாக வரும் படங்களில் விலங்குகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் காலத்தில்தான் நாய், குதிரை, யானை, குரங்கு ஆகியவை சினிமாவில் பயன்படுத்தப்பட்டன.
தற்போது சினிமாவும் பிந்தைய காலகட்டத்திற்குதான் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கர்ணன் குதிரை
பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி ஏற்படுத்திய தாக்கத்தைவிட தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வரும் குதிரையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கி வருகிறார். அதனாலேயோ என்னவோ இந்தப் படத்தில் குதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை படுகொலை பற்றிய படமா?
மாஞ்சோலை கதைக்கருவை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது.
பின்னர், அது மாஞ்சோலை குறித்த படம் இல்லை என்றும், தூத்துக்குடியில் உள்ள கொடியன் குளம் என்ற கிராமத்தில் நடந்த ஜாதி மோதல் குறித்த படம் என்று தகவல் தெரிவிக்கின்றது.
பரியேறும் பெருமாள் படத்தைப் போன்று கர்ணன் படமும் ஒரு ஜாதி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படமும் இதே பாணியில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இதிலும், ஜாதி கருத்து இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனுஷ் ஜாதி பற்றிய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது அவரது படங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது.
இதற்கிடையில், கடந்த சிவராத்திரியை முன்னிட்டு தேனியில் உள்ள ஒரு கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று தனுஷ் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.