Review Chekka Chivantha Vaanam | செக்கச்சிவந்த வானம், மணிரத்னமிசம் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
மணி ரத்னம் படம் என்றாலே சில விதிமுறைகளுக்குட்பட்டு எடுக்கப்பட்டு இருக்கும். செக்கச்சிவந்த வானம் படமும் மணிரத்னமிசம் விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஓப்பனிங் வேலுநாயக்கர் போன்ற கதாப்பாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ்யை, கொலை செய்ய முயற்சி நடக்கிறது. உடனே மனைவி ஜெயசுதாவை காரில் இருந்து தள்ளிவிட்டு, தானும் குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்கின்றார்.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகின்றார். பிரகாஷ்ராஜ்-யை யார் கொலை செய்தது? இதுதான் படத்தின் ஒன்லைன் என சொல்லிவிட முடியாது. இப்படத்திற்கு பல ஒன்லைன் உள்ளது. 4 ஹீரோ என்றால் சும்மாவா?
ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒருவித ஒன்லைன் உள்ளது. எல்லா ஒன்லைன்யும் சொல்லிட்டா சஸ்பென்ஸ் உடைஞ்சிரும். படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.
அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு மூவரும் பிரகாஷ்ராஜ் வாரிசு. விஜய் சேதுபதி அரவிந்த்சாமியின் பள்ளி தோழனாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்.
அரவிந்த்சாமி, ஜோதிகா மற்றும் அதிதிராவை தன்வசமாக்கி கொண்டார். அருண்விஜய்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ். சிம்புவுக்கு டயானா. நான்கு ஹீரோயின் இருந்தும், விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது.
ஹீரோயின்களில், ஜோதிகா மட்டுமே கிளைமேக்ஸ் வரை தாக்குப்பிடிக்கின்றார். மற்ற ஹீரோயின்கள் ஆங்காங்கே கழற்றிவிடப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை, ஜவ்வாக நீளும் கதைக்கு அவ்வப்போது வேகம் கொடுக்கிறது. சந்தோஷ் சிவனின் கேமரா கோணங்கள் தூங்க நினைக்கும் ரசிகர்களை கூட அவ்வப்போது சூடேற்றி விழித்திருக்க வைத்துள்ளது.
படத்தில் ரசிக்க வைத்த காட்சிகள்
பாம் பிளாஸ்ட்டில் உயிர்பிழைத்த ஜெயசுதா, ‘நா என்ன பேய் மாதிரி இருக்கேனா’ என மருமகள் ஜோதிகாவை பார்த்துக்கேட்க, ஆமா அப்படி தான் இருக்க என பதிலுக்கு ஜோதிகா சொல்வதும் காமெடி கலந்த பரிதாபம்.
இலங்கை தமிழில் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், மணி ரத்னம் படத்தில் அவ்வளவு அழகு. அழுக்கு முகத்துடன் கிராமத்துப் பெண்ணாக பார்த்த ஐஸ்வர்யாவை, ஒவ்வொரு பிரேமிலும் அழகாக காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன்.
சிம்புவுக்கு ஏத்த டயானா. சிம்புவின் புஜபல பராக்ரமங்களுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். மேலாடை இல்லாமல், சட்டையை மாட்டும் காட்சியில் ரசிகர்களை கிளர்ச்சியடைய வைத்துள்ளார்.
ஆனால் அடுத்த நொடியே, பட்டென்று சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றார். சிம்புவுக்கு வாழ்க்கைலதான் லவ் செட்டாகல, படத்துலையுமா?
அரவிந்த்சாமி, சிம்பு என கொஞ்ச நேரம் திரையில் தோன்றினாலும் அதிதி, ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கி விட்டார்.
அரவிந்த்சாமியின் பில்டப் காட்சிகளுக்கு குறைச்சல் இல்ல. அதே நேரம் அரவிந்த்சாமியின் மாஸ் கொஞ்சம் மிஸ்ஸிங். ஜோதிகா, அதிதி என ப்ளேபாயாக வலம் வருகின்றார்.
அரவிந்த்சாமிக்கும் அதிதிக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு தெரிந்தும், எவ்வித கோபமும் இல்லாமல் அதிதியிடம் எவ்ளோ காசு வாங்குற என ஜோதிகா கேட்பதும். அதற்கு அதிதி, காசுலாம் இல்ல ஓசி தான்னு சொல்லுறதும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.
அண்ணன் பொருள் தனக்கும் சொந்தம்னு அதிதியை கட்டிப் புரள்வதும். அரவிந்த் சாமியின் பிட் படத்தை பார்க்க அதிதியுடன், சிம்பு சண்டையிடும் காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் காதை கிழித்தது.
ஆக்ஷனுக்கு அருண் விஜய். தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் மற்ற ஹீரோக்களுக்கு மத்தியில், சிக்ஸ்பேக் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் அருண் விஜய் சற்று ஆறுதல்.
கடைசிவரை மொக்கை ஹீரோவாக வலம்வரும் விஜய்சேதுபதி, நான்தான் படத்தோட மெயின்ஹீரோ என ட்விஸ்ட் அடிப்பது யாரும் எதிர்பார்க்காத மொமண்ட்.
படத்தில் உள்ள குறைகள்
4 ஹீரோவுக்கும் சம பில்டப் கொடுப்பதில் மணிரத்னம் நிறைய மெனக்கெட்டுள்ளார். இதன் காரணமாகவே ஸ்கிரீன் பிளேயில் நிறைய தொய்வு. லாஜிக் ஓட்டைகள்.
துபாயில் கரண்ட் கட். வீட்டிற்குள் நுழையும் போதை கும்பல். அடுத்த நிமிடமே உள்ளே நுழையும் போலீஸ். ஒரு ஜெனரேட்டர், பவர்பேக்கப் சிசிடிவி கூடவா இல்லை. லாஜிக்கே இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெயிலுக்கு செல்கின்றார்.
பாலைவனமாய் இருந்த துபாய் இன்னிக்கு வல்லரசு நாடு, நீங்க இன்னும் எவ்ளோ நாள் இப்படி அடிதடின்னு போவீங்க என ரவுடிகளை அருண்விஜய் கேட்பார். ரவுடிகள் மனம் மாறி, அருண் விஜய்யுடன் மீண்டும் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு எதற்கு துபாய் வல்லரசு நாடு டயலாக் எல்லாம்.
நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற சிம்புவையும், அருண்விஜய்யையும் போலீசைவைத்து தூக்கிய அரவிந்த்சாமி, சென்னை வந்ததும் ஓடி ஒளிந்து கொள்கின்றார்.
தனிஒருவன் அரவிந்த்சாமி போன்று பில்டப் உருவாக்கிவிட்டு, அடுத்த காட்சியில் மொக்க வில்லன் ரேஞ்சுக்கு பல்ப் கொடுப்பது லாஜிக் இல்லா மேஜிக்.
ஜோதிகாவை ஒரு புரியாத புதிராகவே காட்டுவதும். கிளைமேக்சில் புஸ்வானமாக்குவதும் பரிதாபம். ஜோதிகா யாருடன் பேசினாலும் ரோமன்ஸ் மூடிலேயே பேசுவது பலவிதங்களில் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
படத்தில் புரியாத காட்சிகளை, படம் முடிந்த பின் ஆங்கில எழுத்தில் பிளாஸ்பேக்காக காட்டியுள்ளார் மணிரத்னம். அத படிக்க தெரிஞ்சா நேர இங்கிலீஷ் படத்த பார்க்க போயிடமாட்டோமா? படத்தையும் இங்கிலீஷ்லவே எடுத்திருக்கலாமே.
படம் எப்படி
மணி ரத்னம் ரசிகர்களுக்கு 85 சவீதம் படம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏ கிளாஸ் ரசிகர்களுக்கு 75 சதவீதம் பிடிக்கலாம். B & C யில் இப்படத்தை எந்த அளவு ரசித்துப் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியே?
சிம்பு ரசிகர்கள் மட்டுமே பாசிடிவ் ரிவியூ என வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சில காட்சிகளை தவிர பெரும்பாலும் B & C திரையரங்கம் அமைதியாகவே இருந்தது.
படம் ஆவ்ரேச் ஹிட்.