Riyaz Khan; வில்லன் நடிகர் ரியாஷ்கானுக்கு அடி உதை: காவல் நிலையத்தில் புகார்! ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வெளியில் சென்ற கும்பலை தட்டிக் கேட்ட நடிகர் ரியாஷ்கானை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் அடித்து உதைத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்றவர்களை தட்டிக்கேட்ட நடிகர் ரியாஷ்கானை அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரை அருகிலுள்ள பனையூரில் வசித்து வரும் ரியாஷ்கான் (47), நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஒரு பெண் உள்பட 5 பேர் கூட்டமாக வெளியில் வந்துள்ளனர். அவர்களை ஏன் ஊர்டங்கு உத்தரவு இருக்கும் போது கூட்டமா வெளியில் செல்லலாமா? என்று தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாக, அந்த கும்பலில் இருந்த ஒருவர் ரியாஷ்கானை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரியாஷ்கான் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.