ஷாடன் ப்ரைவ்டா (schadenfreude): உங்களுக்கும் இந்த நோய் உண்டு!
பிறரின் தோல்வி அல்லது துரதிஷ்டத்தைக் கண்டு சந்தோசப்படுவது. பொதுவாக இந்த ஒரு நிகழ்வு, எல்லோரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
நமக்குப் பிடிக்காதவர்கள், நம்முடன் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என நமக்குப் பிடிக்காதவர்களின் தோல்வியைப் பார்த்து ஆனந்தக் களிப்படைவோம்.
பிறர் துன்பம் கண்டு மகிழ்தல். ஒரே வார்த்தையில் சொன்னால் ‘ஷாடன்ப்ரைவ்டா’. ஜெர்மானிய மொழியில் ஒற்றைச் சொல் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியில் இச்சொல், நம்பிக்கைத் துரோகத்திற்கு நிகராகக் கருதப்படுகின்றது.
மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்வது என்பதை அந்நாட்டு மக்கள், பெரிய துரோகமாகக் கருதுகின்றனர்.
மனிதர்களிடம் இருக்கும் மிகவும் கொடூரமான மற்றும் மட்டமான செயல்களில் ஒன்று இந்த ஷாடன் ப்ரைவ்டா. இது ஒரு வகையான மன நோய் என்று கூடச் சொல்லலாம்.
ஒரு வயதான பெண், மாணவன், குடிகாரன் மற்றும் தொழிலதிபர். இந்த நான்கு நபர்களைப் பற்றி விளக்கிய கோப்புகளை மக்கள் பார்வைக்கு வைத்தனர். அதில் முதல் மூவரைப் பற்றி நல்ல கருத்துக்கள் இடம் பெற்றது.
ஆனால், தொழிலதிபரை மட்டும் இழிவுபடுத்திச் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தொழிலதிபரை பற்றிய கோப்புகளை மக்கள் பார்க்கும்போது, அனைவரது முகத்திலும் அப்படி ஒரு மலர்ச்சி.
நம்மவர்களுக்கு புரியும்படி சொன்னால், அஜித் படம் நன்றாக ஓடவில்லை என்றால், அது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. விஜய் படம் நன்றாக ஓடவில்லை என்றால், அது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
இதைத்தான் Schadenfreude (ஷாடன் ப்ரைவ்டா) என்று கூறுகின்றனர். சுய மதிப்பு (Self Esteem) யாருக்குக் குறைவாக உள்ளதோ? அவர்கள் மற்றவர்களின் தோல்வியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.
ஏன்? இப்படி ஒரு இழிவான எண்ணம் அனைவரிடமும் உள்ளது என ஆராய்ந்தபோது, பரிணாம அடிப்படையிலேயே இப்படி ஒரு குணம் அனைவரிடமும் உள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு கூட, ஷாடன்ப்ரைவ்டா உள்ளதாம்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனக் கூறுவதைபோல், ஷாடன் ப்ரைடாவால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே அதை ஒழிக்க முடியும்.