Friday Special Article – நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்: திருக்கோவில் வரலாறு, வேலுநாச்சியார் பூஜித்த காளியம்மன், அநீதிகளை அழிக்கும் காளியம்மன்!
உலகில் அநீதிகள் தழைத்தோங்கும் போது அன்னை பராசக்தி அவதரித்து நீதி வழங்குவாள் என்பது மக்களின் நம்பிக்கை. அநீதிகள் செய்யும் பலரும் அஞ்சுகின்ற ஒரே ஒரு சக்தி கடவுளுக்கு மட்டும் தான்.
இப்படி வஞ்சகம், பொறாமை, பேராசையால் சிலர் புரியும் அநியாயங்களை பணத்தால் மறைத்தாலும் தெய்வதிடம் இருந்து எவரும் தப்ப இயலாது.
இதனை உறுதிபடுத்தும் வண்ணம் அநீதி புரிவோர்க்கு தக்க தண்டனை வழங்கும் மகாசக்தியாக சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடியில் அன்னை வெட்டுடையார் காளியம்மன் வீற்றிருக்கிறாள்.
வெட்டுடையார் காளியம்மன் வரலாறு
முற்காலத்தில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொல்லங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி தான் ஒரு ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூசிக்குமாறும் கூறினார்.
அந்த பக்தரும் காலையில் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்த இடத்தில் ஒரு ஈச்சமரத்தின் அடியில் தோண்டினார். அப்போது கோடாரியால் வெட்டியதும் சிலை ஒன்று தென்பட்டதை அடுத்து அய்யனார் சிலை வெளியே எடுத்தனர்.
கோடாரியால் பட்ட வெட்டோது அய்யனார் தோன்றியதால் “வெட்டுடைய அய்யனார் “ என்ற நாமத்தோடு கோவில் அமைத்து பூஜித்து வந்துள்ளனர்.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகங்கையை ஆண்ட மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களால் போரில் கொல்லபட்டார்.
அவரது மனைவி வேலுநாச்சியார் மருது சகோதர்களின் உதவியோடு அறியாகுறச்சிக்கு தப்பி சென்றார். அதனை அறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரை தேடி சென்றனர்.
போகின்ற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறுத்ததால் அவளின் சிரத்தை கொய்தனர்.
இதனை அறிந்த அரசி தன் உயிரை காக்க அவள் உயிரை தியாகம் செய்த அப்பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டாள். அவளுக்கு தன் திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்து பூசித்தார்.
அந்தப் பெண் தெய்வமே இந்த வெட்டுடையார் கோவிலில் காளிதெய்வமாக வந்து அமர்ந்தாள் என்கின்றனர். பின் நாளில் இவளே பிரசித்தம் ஆனதால் வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது.
வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாரு காளியம்மன் அருள்பாலிக்கிறாள்.
எட்டு திருகரத்துடன், வலது காலை மடக்கி இடது காலை அரக்கன் மீது ஊன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறாள். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்.
குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இவளிடம் முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.
நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்!
“வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்பது நமது வழக்கில் உள்ள ஒரு தொடராகும். இதற்கு ஏற்ப இக்கோவிலில் காளி அநீதிக்கு உடனடியாக தண்டனை அளிக்கிறாள்.
நல்லோர்க்கு தீங்கிழைப்பவர்கள், திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள், கற்பழிபவர்கள் என எந்த பிரச்சினையாய் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிமானாக விளங்குகிறாள் காளியம்மன்.
இங்கே கோவிலில் காசு வெட்டி போடுதல் என்கிற வழக்கம் உள்ளது. முறையிடுவாரின் கோரிக்கை நியாயமாக இருப்பின் இவளிடம் முறையிட்டால் நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று பக்தர்கள் மெய் சிலிர்த்து அனுபவ நிகழ்வுகளை கூறுகின்றனர்.
பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர, பிள்ளைவரம் கிடைக்க, நல்ல கணவன் அமைய என அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறாள் இந்த வெட்டுடையார் காளி.
கோவில் திருவிழாக்கள்
இங்கு பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஆடிப் பெருக்கில் பூச்சொரிதல் நடைபெறுகிறது. தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
மேலும் பௌர்ணமி பூஜை, நவராத்ரி, ஆடி மற்றும் தை வெள்ளி என விழாக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த வெட்டுடையார் காளியம்மன் துடிப்பான தெய்வம்! நீதி தேவதை! அநீதிகளை வேரோடு சாய்ப்பாள்.
அனைவரும் இந்த காளியம்மனை வழிபட்டு துன்பங்கள், துரோகங்கள் இன்றி இன்புற்று வாழ பிராத்திப்போம்.
அமைவிடம்: சிவகங்கை அருகே 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி.
நடைத்திறப்பு: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. பௌர்ணமியில் இரவு 10 வரை திறந்திருக்கும்.
அற்புதம்
😍❤🙏