Ponmagal Vandhal; OTTக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு! ஓடிடிக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.
ஓடிடி தளத்தில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.
இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.
இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் வெளியிட இருப்பதாக செய்தி வெளியானது.
இது திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், இனி சூர்யா தயாரிப்பில் வரும் படங்களையும், சூரரைப் போன்று உள்ளிட்ட அவரது நடிப்பில் வரும் படங்களையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை வெளியிட இணையதளங்கள் (ஓடிடி) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரையில் எடுக்கப்பட்ட சிறிய பட்ஜெட் படங்களை அந்த தளத்தில் வெளியிடுவதால், தயாரிப்பாளர்களுக்குதான் பயன்.
இதற்காக சூர்யா படத்துக்கு தடை செய்வது வியாபார உரிமையை பெரிதும் பாதிக்கும். இரு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை அவர்களே சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பொன்மகள் வந்தா படம் மட்டுமல்லாமல், மேலும் 3 தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை இணையதளத்தில் வெளியிட இருக்கின்றனர். தொடர்ந்து 5 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.