சென்னை: செவ்வாய் கிழமை தமிழக அரசு கர்நாடகாவிடம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வர வேண்டிய காவேரி தண்ணீர் பங்கீட்டை திறந்து விடும்படி கேட்டுக்கொண்டது.
30தாவது ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
காணொளிகாட்சி மூலம் நடந்த காவேரி நதிநீர் பங்கீட்டு வாரியத்தின் 30தாவது ஆலோசனை கூட்டத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
ஜூன் மற்றும் ஜூலைக்கான நீரை திறக்க வலியுறுத்தல்
“கர்நாடகத்தில் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் வர வேண்டிய 9 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதம் வர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் உடனடியாக திறந்து விட வேண்டும்,” என கோரிக்கை வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக நீர் திறக்க வேண்டும்
இதுவரை 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்துள்ளதாகவும், தமிழகத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி துவங்கியுள்ளதால் போதிய அளவில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும், இதற்கு கர்நாடகா ஒத்துழைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.