நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கான இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஊரடங்கு தளர்வு 2.0 குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது “நம் நாடு கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் பருவமழைக் காலமும் தொடங்கி விட்டது. இந்த கால கட்டத்தில் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தற்போது பொது முடக்கத்தின் 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு 2.0 துவங்கி விட்டது. நாம் சரியான நேரத்தில் பொது முடக்கத்தை செயல்படுத்தினோம். இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்ட போதிலும் மக்கள் சிலர் அதை பொருட்டாக எண்ணாமல் இருந்துவருகின்றனர்.
இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தற்போது பொது முடக்க தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. சிறிய தவறை நாம் செய்து விட்டாலும், அதற்காக மிகப்பெரும் விலையை கொடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
பொது முடக்க காலத்தில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நேரடியாக மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
மேலும் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 90 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் பலன் பெறுவார்கள்”. இவ்வாறு நேற்று மாலை மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.