Sivakumar; திருப்பதி மலை பற்றி சர்ச்சை பேச்சு: சிவகுமார் மீது வழக்குப்பதிவு! நடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் சிவகுமார். தற்போது இவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமாவில் ஹிட் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பதி மலையில் தவறுகள் நடக்கிறது என்றும், அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து, தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள், திருப்பதி மலையில் உள்ள 2ஆவது நகர காவல் நிலையத்தில் சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, நடிகர் சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய திருப்பதியில் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், வரும் 8 ஆம் தேதி நாளை முதல் பல்வேறு விதிமுறை மற்றும் நிபந்தனைகளுடன் கோயில்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக, திருப்பதியில், வரும் 11 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கும் நிலையில், சிவகுமார் திருப்பதி மலை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அண்மையில், நடிகர் சிவகுமாரின் மருமகளும், சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோயில்களுக்கு கொடுக்கும் காசுகளை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவிடுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.