Vijay Kushi Movie; ”கட்டிப்புடி கட்டிப்புடிடா” 20 ஆண்டுகளை கடந்த குஷி! விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வந்த குஷி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துவிட்டது.
குஷி படம் திரைக்கு வந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி திரைக்கு வந்த படம் குஷி.
இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து ஷில்பா ஷெட்டி, விவேக், மும்தாஜ், நிழல்கள் ரவி, விஜயகுமார் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
காதலுக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கப் போய் தாங்கள் இருவரும் காதலில் விழுந்த கதை தான் குஷி.
எனினும், விஜய், ஜோதிகா ஆகிய இருவருமே தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் ஈகோ. அதையும் தாண்டி இருவரும் ஒன்று சேர்வது தான் படத்தின் கிளைமேக்ஸ்.
தனது காதலியின் இடுப்பை பார்த்து பெறும் சண்டை சச்சரவுக்கு உள்ளானவர் விஜய். ஆம், படித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஜோதிகாவின் இடுப்பை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படவே, அவரது இடுப்பை பார்த்துவிடுவார்.
இதனால், கோபமடைந்த ஜோதிகா, அவருடன் சண்டை போட்டுக் கொள்வார். இது பெறும் மோதலாக வரவே, ஈகோ கிளாஸ் ஆகும்.
இவர்களுக்கு இடையில், மும்தாஜ் வருவார். அப்போதுதான் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல். மும்தாஜ், விஜய் இருவருக்கும் இடையில் வரும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதே போன்று விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு இடையில் வரும் ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் என்ற பாடலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
மேலும், மேகம் கருக்குது, மெகரீனா மெகரீனா, மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா ஆகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குஷி படத்தில் ஷில்பா ஷெட்டி மெகரீனா மெகரீனா பாடலுக்கு விஜய் உடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உண்மையில், வாலி படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, விஜய் மற்றும் ஜோதிகாவை வைத்து, புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்தார்.
முதலில் சிம்ரன் தான் இந்தப் படத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு என்னவோ ஜோதிகா மாற்றப்பட்டார்.
குஷி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் எழில் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஒரே நேரத்தில், கண்ணுக்குள் நிலவு மற்றும் குஷி ஆகிய இரு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது.
படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது இந்தப் படம் கள்ளக்காதல் தொடர்பான கதை என்று முதலில் வதந்தி பரவியது.
அதாவது மும்தாஜின் மகளாக ஜோதிகா நடிப்பதாகவும், தனது மகள் ஜோதிகாவின் காதலன் விஜய் மீது காதல் கொண்ட மும்தாஜ் அவர் மீது காமம் கொள்ளும் ஒரு சட்ட விரோத உறவை பற்றிய படம் என்று முதலில் சித்தரிக்கப்பட்டது.
இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர் குஷி படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஜோதிகாவிற்கு கிடைத்தது. குஷி படம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் குஷி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குஷி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதன் காரணமாக, ஹலோவில், 20YearsOfKushi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.