Home ஆன்மிகம் ரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

ரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

0
516
ரத சப்தமி சூரிய வழிபாடு மந்திரங்கள்

ரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? ரத சப்தமி விரதம் எப்படி இருக்க வேண்டும்? மந்திரங்கள் எப்படி கூறவேண்டும்?

அதென்ன ரத சப்தமி? யாருடைய ரதத்தை இது குறிக்கிறது ? ரதத்திற்கும் சப்தமிக்கும் என்ன தொடர்பு என்கிற சந்தேகம் இருக்கலாம்.

இந்து மதத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் வானில் உலா வருவதாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது . அந்த சூரிய பகவானின் ரதத்தையும் திதிகளில் ஏழாவது திதியான சப்தமியையுமே இந்த ரத சப்தமி குறிக்கின்றது.

மகர மாதம் என்று சொல்லப்படுகின்ற தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் சுக்ல பட்ச சப்தமி திதியே ரத சப்தமி எனப்படுகிறது.

ரத சப்தமியின் சிறப்பு

12 ராசிகளிலும் ஒரு ஆண்டிற்கு சூரியன் பயணிக்கிறார். இதில் மகர மாதத்தில் (தை) ஆரம்பமாகும் காலமே உத்தராயண புண்ணிய காலம்  ஆகும்.

உத்தராயண காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது ரதத்தில் பயணிக்கத் துவங்குகிறார்.

வடக்கில் இருந்து வடகிழக்கில் சூரியன் தனது ரதத்தை செலுத்தி பயணிக்க துவங்கும் நாளே ரத சப்தமி நாளாகும்.

இதுவே வசந்த காலத்தின் துவக்கம் மற்றும் சூரியனின் சக்தி மற்றும் ஆற்றலானது அதிகமாக பூமிக்கு கிடைக்கத் துவங்கும் காலமாகும். எனவே பருவநிலை மாற துவங்கும்.

சூரிய ஜெயந்தி விழா

சூரிய வழிபாடு

காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிறந்த மகனே சூரியன் ஆவார். இவர் தோன்றிய நாளே மகர மாதம் சப்தமி திதி ஆகும். இந்நாளே சூரிய ஜெயந்தி விழா ஆகும்.

சூரியனின் தேரோட்டி அருணன் ஆவார். இவர் திருமாலின் வாகனமான பெரியதிருவடி கருடனின் சகோதரர் ஆவார்.

சூரியனின் ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. ஒற்றை சக்கரத்தில் ரதமானது ஓடுகின்றது.

இவரின் ஏழு குதிரைகள் ஏழு தினங்களை குறிப்பதாகும். ஏழு நிற குதிரைகள் வானவில்லின் நிறங்களை குறிக்கிறது. ரதத்தின் 12 சட்டங்கள் 12 ராசிகளை குறிப்பதாகும்.

மகா பாரதத்தில் ரத சப்தமி

மந்திரங்கள்

பீஷ்மர் தான் நினைக்கும் தருவாயில் மரணம் என்ற வரம் பெற்றும், அம்பு படுக்கையில் நினைத்த தருவாயில் மரணம் நேரவில்லை.

காரணம் குறித்து வியாசரிடம் கேட்கும் போது.  வியாசர் “அவரவர் செய்த பாவம் அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்” என்றார்.

நன்னெறி தவறாத பீஷ்மர் பாவம் புரிந்திருப்பாரா? என்றால் ஆம், அவரும் பாவம் ஆற்றினார்.

முன்பு துரியோதனன் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகில் உரித்த போது. அந்த சபையில்  பீஷ்மர் இருந்தும் ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.

தடுத்து நிறுத்தும் அளவு சக்தி, திறன், ஆளுமை எல்லாம் இருந்தும் எதிர்த்து தடுக்கவில்லை. இது பெரும் பாவமல்லவா? இது தான் அவரின் இந்நிலைக்குக் காரணம் என்று வியாசர் உண்மையை எடுத்துரைத்தார்.

இதற்கு பிராயச்சித்தம் கேட்ட போது ஒருவர் தன் தவறை உணர்ந்தாலே அவரின் பாவம் மன்னிக்கப்படும்.

ஒரு தவறை செய்வது மட்டும் பாவம் அல்ல. ஒரு தவறு நடக்கவிடாமல் தடுக்காமல் இருப்பதும் பாவமே ஆகும்.

எல்லாமும் கண்டு காணமல் இருந்த உமது கண்கள், அவையில் பாஞ்சாலி மானம் காக்க எழாத உமது வலுவான தோள்கள், வாளெடுத்து எதிர்காத உமது கைகள், எழுந்து ஓடி காக்காத உமது கால்கள் இவை அனைத்தும் செய்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.

இதை கேட்ட பீஷ்மர் “இதற்கு சாதரண தண்டனை வேண்டாம் வெறும் நெருப்பு போதாது என்னைச் சுடுவதற்கு; சூரியசக்தியால் என்னைப் பொசுக்கி விடுங்கள்” என்று வேண்டினார்.

வியாசர் அர்க்க பத்ரம் என்று சொல்ல கூடிய எருக்க இலையை எடுத்து பீஷ்மர் அங்கம் முழுதும் அலங்கரித்தார்.

இந்த இலையானது சூரியனுக்குரிய சக்தியை உள்ளடக்கியது. இது உமது பாவங்களை பொசுக்கி தூய்மையாக்கும் என்றார். அவரும் தமது பாவம் நீங்கி தியானத்தில் ஆழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

இது நடந்தது ரத சப்தமி நாளில் தான். இதன் அடுத்த நாள் வரும் அஷ்டமியே பீஷ்மாஷ்டமி எனப்படுகிறது.

ரத சப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி தினங்களில் பித்ருக்களுக்கு செய்யும் தர்பணங்கள் பித்ருக்கள் மட்டுமின்றி நைஷ்டிக பிரம்மசாரியான பீஷ்மரின் அருளையும் பெற்று தரும்.

ரத சப்தமி விரதம்

ரத சப்தமி விரதம் எருக்க இலை மந்திரங்கள்

காலை எழுந்ததும் 6 மணி முதல் 7 மணிக்குள் நீர்நிலைகளிலோ அல்லது வீட்டிலோ நீராடும் போது 7 எருக்க இலைகளை தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்கள் மீது வைத்து நீராட வேண்டும்.

எருக்க இலையுடன் ஆண்கள் அட்சதையும், பெண்கள் அட்சதை மற்றும் மஞ்சள் வைத்து கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.

இப்படி செய்வதால் சூரிய ஆற்றல் ஆனது எருக்க இலையில் இருந்து உடல் முழுவதும் பரவி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரும். பாவங்கள் நீங்கும்.

நீராடும் போது கூறும் மந்திரங்கள்,

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய ! 

என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

பின் சூரிய நமஸ்காரம் (சூரிய வழிபாடு) செய்து வீட்டில் பூஜை அறையில் செம்மண்ணில் மொழுகி சூரிய தேர் கோலம் வரைந்து சூரிய சந்திரரை வரைந்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

சூரியனுக்குரிய மலர் தாமரை. இதனை வைத்து பூஜிக்கவும் இல்லையெனில் சிகப்பு நிற மலர்களை வைத்து பூஜிக்கவும்.

சூரியனுக்குரிய தானியம் கோதுமை அதில் சமைத்த பதார்தங்களை வைத்து நைவேத்தியம் செய்யலாம்.

சூரியனுக்குரிய சிகப்பு நிற வஸ்திரங்களை தானம் செய்யலாம். ரத சப்தமியில் செய்யப்படும் தானங்கள் சூரியன் மட்டுமின்றி நமது பித்ருக்கள் ஆசியினையும் பெற்று தரும்.

பூஜையின் போது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் செய்யலாம்.

ஸ்லோகம்-மந்திரங்கள்

“ஓம் ஜபாகுசும சங்காசம்
காச்யபேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரனதோஸ்மி திவாகரம் !”

துதி:

“ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!!”

என்று மந்திரங்கள் கூறி துதித்துப் பாடி போற்றலாம்.

திருப்பதியில் ரத சப்தமி விழா

சூரிய வழிபாடு

சூரியன் விஷ்ணுவின் அம்சம் ஆவார் “சூரிய நாராயணர்” என்றே அழைக்கப்படுகிறார். திருமலை திருப்பதியில் ரத சப்தமி பிரம்மோற்சவம் விமர்சியாக நடைபெறுகிறது.

இந்நாளில் மலையப்ப சுவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் எழுந்தருளி பிரம்மோற்சவம் காண்பார்.

அனைத்துப் பெருமாள் கோவிலிலும் சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி தரிசனம் தருவார்.

2020 இல் ரத சப்தமி

ரத சப்தமி விரதம்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி வருகிறது.

அனைவரும் தவறாமல் சூரியனுக்குரிய (சூரிய வழிபாடு) அர்க்க பத்ரம் (எருக்க இலை) வைத்து கிழக்கு நோக்கி நீராடவும். ரத சப்தமி விரதம் இருக்கவும்.

இந்நாளில் கண்களால் காணக் கூடிய ஒரே இறைவனான ஒளி கடவுள் சூரியனை துதித்து போற்றி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ்வோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here