இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்? அதில் மறைந்துள்ள உண்மை என்ன? ஆன்மீக செய்திகள். spiritual news in tamil.
இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?
நாம் இறைவனை காண கோயில்களுக்கு செல்லும் போதும், வீட்டில் பூஜைகள் செய்யும் போதும் இறைவனுக்கு நைவேத்தியம், இனிப்பு பதார்தங்கள், பழவகைகள் படைக்கிறோம்.
எத்தனை பொருட்களை சமர்பித்தாலும் அதில் தேங்காய் வாழைப்பழம், வெற்றிலை மற்றும் பாக்கு இல்லாது நாம் செய்யும் பூஜை நிறைவுறாது.
அது ஏன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு கட்டாயம் வைக்க வேண்டும்?
அதில் என்ன தாத்பர்யம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அனைவரும் வைக்கின்றனர் நாமும் வைக்கிறோம் என்று செய்ய கூடாது.
தேங்காய் ஏன் உடைக்கிறோம்?
மனிதனின் மும்மலங்களை அகற்றினாலே போதும் வீடுபேறு அடைந்து விடலாம்.
அணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்களே மனிதர்களை ஆட்டிபடைக்கின்றது. பலரும் அதில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த மூன்றையும் அகற்றினால் இறைவனை உணரலாம் என்ற தாத்பர்யத்தை உணர்த்தவே தேங்காய் உடைக்கப்படுகிறது.
ஆணவம் என்ற மட்டையை உறித்து, கன்மம் என்கிற நாரை அகற்றி, மாயை என்கிற ஓட்டை நீக்கினால் கிடைக்கும் பரிசுத்தமான வெண்மையான தேங்காயே இறைநிலை ஆகும். இதை உணர்த்தவே தேங்காய் உடைத்து சமர்பிக்கிறோம்.
மேலும், தேங்காயும் முழுமையாக மட்டையுடன் இருந்தால் தான் நடவு செய்ய இயலும். உடைத்து விட்டு சிரட்டையை மண்ணில் இட்டால் வளராது.
அதுப்போல ஆவணம், கன்மம், மாயை அகற்றினால் மறுபிறவி இல்லாமல் வீடுபேறு அடையலாம் என்பதை உணர்த்துகிறது.
வாழைப்பழம் ஏன் படைக்க வேண்டும்?
எண்ணிலடங்கா பழவகைகள் இருப்பினும், விலை உயர்ந்த பழங்கள் இருப்பினும் இறைவனுக்கு வாழைப்பழம் தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மா, பலா, வாழை என்கிற முக்கனி வகைகளில் வாழைக்கு தனி சிறப்பு உண்டு.
அனைத்து பழங்களும் விதைகளைக் கொண்டே இருக்கும். அந்த விதையை மண்ணில் போட்டால் மீண்டும் செடியாக அல்லது கொடியாக வளரும்.
ஆனால் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளி போல் விதைகள் இருக்கும் அதை பூமியில் இட்டால் அல்லது பழத்தை முழுமையாக புதைத்தாலும் மீண்டும் செடியாக வளராது.
அதுபோல மீண்டும் பிறவாத நிலை வேண்டும் என்கிற தாத்பர்யத்தை உணர்த்தவே வாழைப்பழத்தை படைக்கிறோம். தேங்காய் அழுகினால் அபசகுணமா?
தாம்பூலத்தின் சிறப்புகள்
தாம்பூலம் எனப்படுகின்ற வெற்றிலையும் பாக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் இருக்கும்.
வெற்றி+இலை = வெற்றிலை பெயரிலேயே உள்ளது போல் காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காவே வெற்றிலை படைக்கிறோம்.
இராமயணத்தில் இராமனின் இராவணனை கொன்ற வெற்றியைக் கூறிய அனுமனுக்கு சீதை அருகில் இருந்த வெற்றிலையைப் பறித்து ஆசீர்வாதம் செய்தார்.
எனவே தான் அனுமனுக்கு இன்றும் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குகிறோம்.
மேலும் வெற்றிலை துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஸ்வரூபமாகவும் கருதப்படுகிறது. நுனியில் லட்சுமியும், நடுவில் வாணியும், காம்பில் துர்கையும் உள்ளனர் என்பர்.
பாக்கு செல்வ வளத்தை தரும். இவை பலவிதமான நோய்களை அகற்றும். எனவே தான் தாம்பூலம் படைக்கிறோம்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வோரு செயல்களுக்கு பின்னும் பல காரணங்கள் இருக்கும்.
அதை நாம் உணர்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இனியாவது இறை வழிபாட்டில் உள்ள தாத்பர்யங்களை உணர்ந்து செயலாற்றுவோம்.