ஏப்ரல் 20 முடிந்தபின் ஊரடங்கில் பல தளர்வுகள் இருப்பதாக கூறுகிறது மத்திய அரசு.
கொரோன வைரஸ் பரவலை தடுக்க உலகநாடுகள் அனைத்தும் பலவிதமான முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்திய கடந்த 21 நாள் இருந்த ஊரடங்கினை மேலும் 14 நாட்கள் நீட்டித்து முழுதீவிரத்துடன் கொரோனாவினை கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என்றாலும், தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் சென்றது.
இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில் எப்போதுவேண்டுமானாலும் இதன் தீவிரம் அதிகமாகுமென்று அரசு மிக கவனமாக முடிவுகளை எடுத்துவருகிறது.
ஊரடங்கினை மேலும் நீடித்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட இடங்களை மிகவும் தீவிரமாக கண்காணித்து கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் குறைந்துவருகின்ற காரணத்தால், ஏப்ரல் 20க்கு பின்னர் ஊரடங்குகளில் சில விதிமுறைகளோடு, சில தளர்வுகளும் கிடைக்கும் என்று அரசு கூறியுள்ளது.
விவசாயம், குறு சிறு தொழில்கள் மற்றும் கட்டிடத்தொழில், 100 நாட்கள் வேலைவாய்ப்பு போன்ற தொழில்கள் எல்லாம் நடக்கலாம் என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் ஒரு சில தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை நன்றாக பரிசீலித்த மத்தியஅரசு, 170 மாவட்டங்களை மட்டும் ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 20 முடிந்த பின் இந்த மாவட்டங்கள் தற்போது உள்ளபடியே இருக்கும் என்றும் அதில் பல புதிய கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு வெளியில் இருந்து யாரும் உள்ளேயும், உள்ளே இருந்து யாரும் வெளியேயும் செல்ல கூடாது என்று விதிமுறைகளை கூறியுள்ளது.
ஹாட்ஸ்பாட்டாக உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதித்த பகுதிகளில் அறிகுறிகள் இருக்கும் அனைவருமே பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும், கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருமே அறிகுறிகள் இல்லையென்றாலும் பரிசோதனைக்கு வரவேண்டும் என்று கட்டளை விடுத்துள்ளது.
இதன்மூலம் கொரோனா விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று மத்தியஅரசு உறுதியுடன் கூறியுள்ளது.