எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்: இளமையில் மரணம்
எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், கோழிக்கறி அல்லது இறைச்சி சாப்பிடுவதால் இளமையில் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை விரும்பி உண்பது வழக்கம்.
வீட்டில் அடிக்கடி செய்து உண்பது மட்டும் இல்லாமல் கடைகளிலும் அதிகம் வாங்கி உட்கொள்கிறோம்.
அமெரிக்காவில் நடந்த ஆய்வு
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அதிகமாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன்-மீன் போன்ற உணவுகளை உண்பதால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்களும் இளமையில் மரணமும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
50 முதல் 70 வயதான சுமார் 1 லட்சம் பெண்களைச் சோதனைக்கு எடுத்துக்கொண்டனர். 1993 முதல் 2017 வரை அவர்களின் உடல்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த 31,588 உயிரிழப்பில் 9320 பேர் இதயம் தொடர்பான நோய்களாலும், 8358 பேர் புற்றுநோய்களாலும், 13880 பேர் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் உணவு முறைகளைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன், மீன், சான்ட்விச், சிப்ஸ் மற்றும் பிறவித உணவுகளை அதிகமாக உட்கொண்டுள்ளனர்.
தேவைக்கு அதிகமாக, எண்ணையில் பொறிக்கப்பட்ட சிக்கனை ஒரு நாளில் சாப்பிடும்போது 13 சதவிகிதம் பேருக்கு இளமையில் மரணம் ஏற்பட வாய்ப்பும் 12 சதவிகிதம் பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
தேவைக்கு அதிகமாக பொறிக்கப்பட்ட மீனை ஒரே நாளில் எடுத்துக்கொள்ளும் பொழுது 7 சதவிகிதம் இளமை மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 12 சதவிகிதம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி நாகரீகம் என்ற பெயரில் உணவுப் பழக்கத்தை மாற்றி நமக்குநாமே கேடு செய்து வருகின்றோம்.
முடிந்த அளவு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.