நிர்மலா சீதாராமன் கொரோனா வைரஸ் நிவாரணம்: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பொருளாதார நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.
மார்ச் 19-ஆம் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதைச் சரிசெய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு, வங்கி ஏடிஎம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா நிவாரண உதவித்தொகையை தெரிவித்தார்.
லாக்டவுன் அறிவித்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஏழைகளுக்கான நிதி அளிக்க முடிவு செய்துள்ளோம். மொத்தம் ரூ.1.7 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (வாங்குவோரின் விருப்பம்) இலவசமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு வகை பருப்புகளை விரும்புவார்கள். அவர்கள் விரும்பும் பருப்புகளை ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடரும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என கொரோனா வைரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு 50 லட்சம் இன்சூரன்ஸ் அவர்கள் பெயரில் எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு முன்கூட்டியே முதற்கட்ட நிவாரண உதவித்தொகையாக 2000 அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் பல திட்டங்கள் குறித்து உரையாற்றி வருகிறார்.