மனோகர் பாரிக்கர்: கோவா முதல்வர் காலமானார்
கோவாவின் முதல்வரும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பாரிக்கர் தன்னுடைய 63வது வயதில் இறைவனடி சென்றார்.
கோவாவில் பாஜவைச் சேர்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் பல மாதங்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இச்சூழலில் இன்று ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கோவா முதல்வர் அலுலவகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மருத்துவர்கள் முயன்ற வரை போராடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என அறிவித்துள்ளார்.
ஐஐடி’யில் படித்த முதல் மாநில முதல்வர்
பாரிக்கர் கோவா மாநிலத்தின் மபுசாவில் பிறந்தவர். அவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
1978ல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே ஐஐடி’யில் படித்த முதல் மாநில முதல்வர் இவர் தான்.
1994ஆம் ஆண்டு முதல்முறை கோவா சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானார். அக்டோபர் 24, 2000 முதல் பிப்ரவரி 2, 2005 வரையும், மார்ச் 9, 2012 முதல் நவம்பர் 8, 2014 வரையும் மார்ச் 14, 2017 முதல் இறப்பு வரையும் மூன்று முறை கோவா மாநில முதல்வராக இருந்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நவம்பர் 9, 2014 முதல் மார்ச் 13, 2017 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார்.