நிர்பயா வழக்கு: வினய் சர்மா தப்பிக்க முயற்சி. சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க அனுமதி கோரியா வழக்கில் திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்பயா கற்பழிப்பு வழக்கு
கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா அடையாளம் தெரியாத நபர்களால் பேருந்திலேயே வைத்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எழுப்பியது.
நாடு முழுவதும் இதுபோன்ற பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களுக்காக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன.
மேலும் குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலட கோரி வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இன்னும் ஒருபடி மேலே போய் 2013 ஆண்டில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தோல்விக்கு மேற்சொன்ன குற்ற சம்பவமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
நிர்பயா வழக்கின் தூக்கு தள்ளிப்போவது ஏன்
கடந்த 2012 ஆண்டு முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது.
மேலும் இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.
இதனிடையே குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக கருணை மனு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு உள்ளிட்ட சட்ட நிவாரணிகளை பயன்படுத்தி வந்தனர்.
தொடர்ந்து வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த காரணங்களினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கில் போடுவது தள்ளிப் போடப்பட்டு ஒருவழியாகக் கடந்த மாதம் 1 தேதி இரண்டாவது முறையாக இறுதி செய்யப்பட்டது.
தூக்கிலிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள போதும் குற்றவாளிகள் கருணை மனு உள்ளிட்ட சட்ட நிவாரணிகளை முழுவீச்சில் பயன்படுத்தி இதுநாள் வரை தாமதம் செய்து வருகின்றனர் .
குற்றவாளி வினய் சர்மா சதி
நேற்று ஒருபடி மேலே போய் வினய் சர்மா, தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்தான்.
வினய் சர்மா, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தூக்கில் இருந்து தப்பிக்க அல்லது காலதாமதம் செய்யவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது உச்ச நீதிமன்ற விசரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது .
ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவருக்கும் அனைத்து சட்ட நிவாரணிகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கக் கோரி கீழ் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே உள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தான் புதிய தேதியை கீழ் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ள திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய இரண்டு வாரகால அவகாசம் நிறைவடைந்தவுடன் குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட புதிய தேதியை கீழ் நீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.