தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 3-ஆவது நாளாக மாநிலத்தில் 3000-ஐ கடந்துள்ளது கொரோனா பாதிப்பு.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது.
நேற்று புதிதாக பதிவான 3,713 பேருடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரையில்லாத அளவாக தமிழகத்தில் ஒரே நாளில் 68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் தனியார் மற்றும் 45 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். நேற்று ஒரே நாளில் 2,737 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மாநிலத்தில் 44,094 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தற்போது 33,213 பேர் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 217 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93 பேருக்கும்,
திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 110 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.