பஸ் லாரி மோதல்: 19 பேர் உயிரிழப்பு, 23 பேர் காயம். அவினாஷி அருகே அரசு வல்வோ பஸ்., கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) சொந்தமான பஸ் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு சென்றுகொண்டு இருந்தது.
திருப்பூர் மாவட்டம் அவினாஷி அருகே வந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்து அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
பேருந்தின் ஒரு பக்க இருக்கைகள் பின் டயர் வரை சேதமடைந்து உள்ளது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
23-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இறந்தவர்கள் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
லாரி டிரைவர் தலைமறைவு
இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி தவறான பாதையில் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி டிரைவர் விபத்து நடந்தவுடன் தலைமறைவு ஆகியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.
முதல்வர் பிணராயி விஜயன் ஆறுதல்
இந்த விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கேரளா முதல்வர் பிணராயி விஜயன், மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் விஜயன் கூறினார்.