சென்னை: பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதே சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்கிழமை தெரிவித்தார். “அதிக மக்கள் பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தி வருவதனாலேயே சென்னையில் இக்கொடிய நோய் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,” என தமிழக முதல்வர் மாநகராட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
மக்கள் தொகை அதிகம் மற்றும் நெருக்கடி
சென்னையில் உள்ள அதிக மக்கட்தொகை மற்றும் குறுகிய தெருக்களும் மற்றொரு முக்கிய காரணம் என முதல்வர் தெரிவித்தார். மேலும் “இருப்பினும் நாங்கள் ஒருநாளைக்கு 12,000 இரத்த மாதிரிகளை சோதனை செய்து வருகிறோம். சென்னையில் கொரோனா அதிக எண்ணிக்கையிலான பாதிப்பிற்கு இதுவும் ஒருகாரணமாகும் அதனால் மக்கள் கவலை படவேண்டாம்,” என அவர் தெரிவித்தார். மேலும் 4,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் மற்றும் கைகளை நன்றாக கழுவும்படியும் கேட்டுக்கொண்டார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சோதனை மையங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார்.
கட்டுபாட்டு மண்டலங்கள்
கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவருவதாகவும் மற்றும் கிருமி நாசினி ஒரு நாளைக்கு மூன்றுமுறை தெளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
” அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ” அவர் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க ஜிங்க்(துத்தநாகம்) மற்றும் விட்டமின் மாத்திரைகள் மற்றும் கட்டுபாட்டுமண்டலங்களில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நடமாடும் மருத்துவ ஊர்தி
கோவிட்-19 பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ ஊர்திகள்(Mobile Ambulance) செயல்பாட்டில் உள்ளதாகவும். யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என பழனிச்சாமி தெரிவித்தார்.
யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளது எனவும். ” அம்மா உணவகங்கள் ஒருநாளைக்கு 7 இலட்சம் பேருக்கு உணவு அளித்து வருவதாகவும். நாங்கள் இலவச அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணெய் அகியவற்றை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வழக்குவோம்,” என முதல்வர் தெரிவித்தார்.