செவ்வாய் கிரகம் செல்ல வைக்கும் ‘பாங்கு பானம்’ லிட்டர் ரூ.300 விற்பனை செய்த இளைஞர்கள் கைது, மாற்று போதைக்காக கஞ்சாவில் இருந்து பாங்கு பானம் தயாரித்து விற்ற ராமேஸ்வரம் இளைஞர்கள்.
கொரோனா பரவலின் காரணமாக நாடே ஊரடங்கில் இருப்பதால் அனைத்து மதுக்கடைகளும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன.
இதனால் மது பற்றாக்குறை ஏற்பட்டு அது கிடைக்காமல் குடிமகன்கள் திணறி வருகின்றனர். திருட்டு தானமாக விற்கும் மதுக்களும் விலை ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த நேரத்தில் பல்வேறு நபர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸிடம் சிக்கி வருகின்றனர். கேரட் பீர், திராட்சை ரசம் என வித விதமாக தயாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா மற்றும் பழங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பாங்கு’ எனும் போதை பானம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்குத் தகவல் கிடைத்தது.
ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் 20 லிட்டர் சரக்குடன் இரண்டு இளைஞர்கள் மாட்டிக்கொண்டனர்.
ராமேஸ்வரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்த போது போதை பானம் தயாரித்து மதுபானப் பிரியர்களிடம் ஒரு லிட்டர் ரூ.300-க்கு விற்று வந்ததை ஒப்புக்கொண்டனர்.